நந்தினி கடையில் பொருட்களை சூறையாடிய ஓம்பிரகாஷ் மகள்
ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்: முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷின் மகள் கிருத்தி, 'நந்தினி' கடையை சூறையாடி உள்ளார்.கர்நாடக போலீஸ் முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ். பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள அவரது வீட்டில் மனைவி பல்லவி, மகள் கிருதி, மகன், மருமகளுடன் வசித்தார். சொத்துத் தகராறில் ஓம்பிரகாஷை, கடந்த ஏப்ரல் 21ம் தேதி கத்தியால் குத்தி, பல்லவி கொலை செய்தார். தற்போது சிறையில் உள்ளார்.மகள் கிருதிக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதால் மேற்கொண்டு விசாரிக்கவில்லை. வீட்டில் அவர் தனியாக வசித்து வருகிறார்.சமீபத்தில் அவரது வீட்டின் அருகே உள்ள, 'நந்தினி' பார்லருக்கு கிருத்தி சென்றுள்ளார். பொருட்கள் எதுவும் வாங்காமல், கடை உரிமையாளரை முறைத்து பார்த்துள்ளார். 'எதற்காக முறைக்கிறீர்கள்' என்று கடை உரிமையாளர் கேட்டதால், கோபம் அடைந்த கிருத்தி, கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து, அதற்குள் இருந்த தின்பண்டம், பொருட்களை துாக்கி வீசி சூறையாடியுள்ளார்.பின், அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.