உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒன்றரை மாத ஆண் குழந்தை திருட்டு; 24 மணி நேரத்தில் மீட்பு; 4 பேர் கைது

ஒன்றரை மாத ஆண் குழந்தை திருட்டு; 24 மணி நேரத்தில் மீட்பு; 4 பேர் கைது

பல்லாரி : பல்லாரியில் பிறப்பு சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி, ஒன்றரை மாத ஆண் குழந்தையை திருடி விற்ற பெண், வாங்கியவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாரி மாவட்டம், பெனகல் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவருக்கு ஜூலை 28ல் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக, கடந்த 12ம் தேதி மாவட்ட மருத்துவமனைக்கு தன் குழந்தை மற்றும் தாயாருடன் ஸ்ரீதேவி வந்திருந்தார். அப்போது அவரிடம் ஷமீம், 25 , என்ற பெண் அறிமுகமானார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, தன் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க வந்ததாக ஸ்ரீதேவி தெரிவித்தார். பல்லாரி நகரசபையில் அதிகாரிகளை எனக்கு தெரியும். பிறப்பு சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி, ஸ்ரீதேவி அவரது தாயாரை ஷமீம் அழைத்து சென்றார். அங்கு சென்றதும், குழந்தையை ஷமீமிடம் கொடுத்து விட்டு, ஸ்ரீதேவியும், அவரது தாயாரும் கழிப்பறைக்கு சென்றனர். கழிப்பறைக்கு சென்று திரும்பிய போது, குழந்தையையும், அப்பெண்ணையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர்கள், புரூஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், மருத்துவமனை மற்றும் நகரசபையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், திருடியது கவுல்பசாரை சேர்ந்த ஷமீம் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஷமீம், அவரது கணவர் இஸ்மாயில், 65, மூலம் தோரணகல்லில் தாயத்து தயாரிக்கும் பாஷா, 55, என்பவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து, குழந்தை இல்லாத பசவராஜ், 43, என்பவருக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஷமீம், இஸ்மாயில், பாஷா, பசவராஜ் ஆகிய நான்கு பேரையும், 24 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் ஷமீம் தாயார், 2013ல் விம்ஸ் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரது மகளும் கைது செய்யப்பட்டு உள்ளதால், குடும்பத்தினர் ஒன்றாக இதுபோன்று குழந்தைகளை திருடி விற்கிறார்களா என்று போலீசார் சந்தேகம் அடைந்து உள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை