உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 2 உயிரை பறித்த யானைகள் ஒன்று வனத்துறையிடம் சிக்கியது

2 உயிரை பறித்த யானைகள் ஒன்று வனத்துறையிடம் சிக்கியது

சிக்கமகளூரு : சிக்கமகளூரில் இருவரை கொன்ற காட்டு யானைகளில் ஒன்றை, 'கும்கி' யானைகள் உதவியால் நேற்று வனத்துறையினர் பிடித்தனர். சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.,புராவின் பாலேஹொன்னுார் வனப்பகுதிக்கு உட்பட்ட பன்னுார் கிராமத்தில், கடந்த 23ம் தேதி எஸ்டேட்டில் பணியாற்ற சென்று கொண்டிருந்த அனிதா என்ற கூலி தொழிலாளியை, உணவு தேடி வந்த யானைகள் மிதித்துக் கொன்றது. கடந்த 27ம் தேதி, சுப்பே கவுடா என்ற வாலிபரும், யானைகள் மிதித்து பலியானார். இதனால் கோபமடைந்த கிராம மக்கள், பாலேஹொன்னுார் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். யானையை பிடித்து, வேறு இடத்தில் விடும்படி கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினரும், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து வனத்துறையினர், ஷிவமொக்கா மாவட்டத்தின் சக்ரேபைலு யானைகள் முகாமில் இருந்து நான்கு கும்கி யானைகளை வரவழைத்தனர். யானையை பிடிக்கும் பணி திங்கட்கிழமை துவங்கியது. யானைகளில் ஒன்றுக்கு மயக்க ஊசி செலுத்தினர். அதை பொருட்படுத்தாமல், மற்ற யானைகளுடன் அங்கிருந்து அந்த யானை தப்பி சென்றது. யானைகளை பின் தொடர்ந்து, இரண்டாவது முறையாக மயக்க மருந்து செலுத்தப்பட்டது. மயக்கம் அடைந்த யானையின் கழுத்தில் கனமான கயிறு கட்டப்பட்டது. மயக்கம் தெளிய ஊசி போடப்பட்டு, கும்கி யானைகள் உதவியுடன் அது லாரியில் ஏற்றப்பட்டது. இரண்டு உயிர்களை பலிவாங்கிய யானைகளில் ஒன்று பிடிபட்டது. மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள யானைகளை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி