நவ.,15ல் திறப்பு!
பெங்களூரின் தெற்கு பகுதியில் உள்ள காலேன அக்ரஹாராவில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள நாகவாரா வரை 21.25 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் பாதை அமைக்க, கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நிலம் கையகப்படுத்தும் பணிகள், கட்டுமான பணிகள், டெண்டர்கள் முடிந்த நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு பணிகள் துவங்கின. தற்போது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. காலேன அக்ரஹாரா, ஹுளிமாவு, ஐ.ஐ.எம்.பி., ஜே.பி.நகர் 4 வது பேஸ், ஜெயதேவா மருத்துவமனை, தாவரகெரே வரை உயர்மட்ட ரயில் நிலையங்களும், டெய்ரி சதுக்கம், லக்கசந்திரா, லாங்போர்ட் டவுன், நேஷனல் மிலிட்டரி பள்ளி, எம்.ஜி.ரோடு, சிவாஜிநகர், கன்டோன்மென்ட், போட்டரி டவுன், டேனரி ரோடு, வெங்கடேஷ்புரா, காடுகொண்டனஹள்ளி, நாகவாரா என, 12 சுரங்கபாதை ரயில் நிலையங்களும் வர உள்ளன. மக்கள் போராட்டம்
இதில், காலேன அக்ரஹாரா – தாவரகெரே இடையில் 7.50 கி.மீ., துாரத்திற்கு சிக்னலிங் அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. மற்ற இடங்களில் பணிகள் முடிந்ததாலும் சிக்னலிங், நிலையங்கள் உள்வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் இருப்பதால், முதல்கட்டமாக 7.50 கி.மீ., துாரத்திற்கு மட்டும் ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றாலும், ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து பொதுமக்கள் கடந்த மாதம் தாவரகெரே மெட்ரோ ரயில் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஒரு வழியாக காலேன அக்ரஹாரா – தாவரகெரே இடையில், மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் 15 ம் தேதி துவங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், இதுவரை பதில் வரவில்லை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டாலும், அடுத்த மாதம் 15 ல் மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் துவக்கி வைப்பதை, முதல்வர் சிவகுமார் நேற்று உறுதிப்படுத்தினார். ரூ.17,346 கோடி செலவு
முதல்கட்டமாக, 7 கி.மீ., துாரத்திற்கு ரயில்கள் இயக்கப்படும் போது, பன்னர்கட்டா சாலையில் உள்ள கொட்டிகெரே, ஹுளிமாவு, அரகெரே, ஜே.பி.நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு வருவோர், மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். அதே நேரம், முழு பாதையில் ரயில் சேவை துவக்கினால் காலேன அக்ரஹாராவில் இருந்த நாகவாராவுக்கு 45 நிமிடத்தில் சென்று விடலாம். மன்யதா டெக் பார்க்கில் உள்ள ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு பலனுள்ளதாக இருக்கும். சிவாஜிநகர், எம்.ஜி. ரோடு போன்ற வணிக மையங்களுக்கும், தெற்கு பகுதி மக்கள் எளிதில் செல்ல முடியும் என்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் இந்த ரயில் பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த, 2014ல் இந்த திட்டத்தை துவங்கும் போது, 11,014 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், திட்டத்தை முடிக்கும் போது 17,346 கோடி ரூபாய் செலவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.