பண்டிப்பூர் வனப்பகுதியில் ஹோம் ஸ்டேக்கள் கட்ட எதிர்ப்பு
சாம்ராஜ்நகர் : பண்டிப்பூர் தேசிய பூங்காவில், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஹோம் ஸ்டேக்கள் கட்ட நில உரிமையாளர்கள் திட்டமிட்டு, அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.சாம்ராஜ்நகரின், பண்டிப்பூர் தேசிய பூங்கா இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியாகும். இங்கு புலி, யானை, சிறுத்தை, மான், கரடி, மயில், காட்டு எருமை உட்பட, பல்வேறு விலங்குகள், பறவைகள் வசிக்கின்றன.இதனால் சுற்றுலா பயணியர் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தினமும் வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். சில நாட்கள் இங்கு தங்க விரும்புகின்றனர்.பண்டிப்பூரில் அரசு மற்றும் தனியார் நிர்வகிக்கும் சில ரிசார்ட்டுகள் உள்ளன. ஆங்காங்கே ஹோம் ஸ்டேக்களும் உள்ளன. இங்கு நிலம் வைத்துள்ள பலரும், ரிசார்ட்டுகள், ஹோம் ஸ்டேக்கள் கட்ட விரும்புகின்றனர். இதற்காக வனத்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கடுமையாக எதிர்க்கின்றனர். பண்டிப்பூரில் அபூர்வமான மரங்கள், மூலிகை செடிகள், விலங்குகள், பறவைகள் உள்ளன. 2023ம் ஆண்டில் 408 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது 393 ஆக குறைந்துள்ளது. இதற்கு வனப்பகுதிகளில் வர்த்தக கட்டடங்கள், ரிசார்ட்டுகள் கட்டப்படுவதே, முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.புலிகள் சரணாலயமான பண்டிப்பூரில், ஹோம் ஸ்டேக்கள் கட்ட அனுமதி கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களை, வனத்துறை நிராகரிக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து, வன விலங்குகள் ஆர்வலர் மல்லேஷப்பா கூறியதாவது:பேகூரு, கோபாலசாமி மலைகள், சரகூரு, ஹெடியாளா பகுதிகளில் ஹோம் ஸ்டேக்கள் கட்ட, அனுமதி கேட்டுள்ளனர்.இந்த கோரிக்கைகளை வனத்துறை நிராகரிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும், ஹோம் ஸ்டேக்கள், ரிசார்ட்டுகள் கட்ட வாய்ப்பளிக்க கூடாது.விவசாயிகள் விவசாய நோக்கத்துக்காக, வீடு, ஷெட்டுகள் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் வர்த்தக கட்டடங்கள் கட்ட கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.