உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தந்தைக்கு எதிராக மகள் வழக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

 தந்தைக்கு எதிராக மகள் வழக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

பெங்களூரு: 'திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியதால், தந்தை, என்னை கவுரவ கொலை செய்து விடுவாரோ என்று பயமாக உள்ளது' என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மகள் தாக்கல் செய்த மனுவை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண் காஜல் ராஜ்புரோஹித். கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தன் தந்தை அசோக் புரோஹித்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். என் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று என் தந்தையிடம் பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவரோ, வலுக்கட்டாயமாக ராஜஸ்தானை சேர்ந்த டாக்டர் யாஷ்பால் என்பவருடன் எனக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளார். 'ஏற்கனவே, இளம் வயதில் என் சகோதரியின் விருப்பம் இன்றி, அவருக்கு, என் தந்தை திருமணம் செய்து வைத்ததால், தற்போது சிரமப்பட்டு வருகிறார். என் தந்தைக்கு எதிராக நான் செயல்படுவதால், 'கவுரவ கொலை' செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'காஜலுக்கு போதுமான பாதுகாப்பை ஒயிட்பீல்டு போலீசார் வழங்க வேண்டும். எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி