உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காலை 6:00 முதல் இரவு 10:00 வரை ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவு

 காலை 6:00 முதல் இரவு 10:00 வரை ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஜூலை மாதம் ரேஷன் பொருட்கள் வினியோகத்தை விரைவுபடுத்தும் வகையில், ரேஷன் கடைகளின் பணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா உணவு பொது வினியோக துறையின் வழிகாட்டுதல்படி, ரேஷன் கடைகள் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும் என இரண்டு ஷிப்ட்களில் திறந்திருக்கும். இந்நேரத்தில், பயனாளிகள் ஒரே நேரத்தில் கடைகளுக்கு வருவதால், ரேஷன் பொருட்கள் வாங்கியதை பதிவு செய்வது மற்றும் வினியோகம் தாமதம் ஆகிறது. இதனால் கூலி வேலைக்கு செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோர் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமலும், ஒரு நாள் கூலி கிடைக்காமல், பணிக்கு அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் இது தவிர, சமீப நாட்களாக, ரேஷன் கடைகளுக்கு சென்றால், அரிசி முழுமையாக வந்த பின் வழங்குவதாக பலமுறை கூறி, பயனாளிகளை கடை உரிமையாளர்கள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த பயனாளிகள், உணவு பொது வினியோக துறைக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, உணவு பொது வினியோக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலம் முழுதும் ஜூலை மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் வினியோகத்தை நிறைவு செய்யும் வகையில், நியாய விலை கடைகள் இனி தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்க வேண்டும். என்.எப்.எஸ்.ஏ., எனும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், அன்ன பாக்யா திட்டத்தின் கீழ், ஜூலை மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இலக்கு நிர்ணயம் எப்.சி.ஐ., எனும் இந்திய உணவு கழகத்தின் ஓ.எம்.எஸ்.எஸ்., (டி) எனும் திறந்த சந்தை விற்பனை திட்டத்திடம் இருந்து, அரிசி கொள்முதல் பணி நடந்து வருகிறது. இவை நியாய விலை கடைகளுக்கு வந்து சேர்ந்ததும், தாமதமின்றி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும், ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் இருக்கும் வரை, மாநிலம் முழுதும் அனைத்து நியாய விலை கடைகளும், காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை கட்டாயம் திறந்திருக்க வேண்டும். மாவட்ட இணை மற்றும் துணை இயக்குநர்கள், தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் ரேஷன் பொருட்கள் சீராக வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் வேலைக்கு செல்வோர், பகல் நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காதவர்களும், இந்த புதிய நேர அட்டவணை மிகவும் உதவியாக இருக்கும். நேரில் ஆய்வு பயனாளிகளுக்கு ரேஷனில் உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நியாயவிலை கடை உரிமையாளர்கள், இந்த விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ரேஷன் வினியோகத்தில் எந்த குறைபாடும் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். ஜூலை இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள இந்த கால அவகாசத்தை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை ரேஷன் கடை உரிமையாளர்கள் பின்பற்றுகின்றனரா என்பதையும், தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பதையும் துறையின் இணை, துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு துறையின் இணை, துணை இயக்குநர்கள், உணவு இன்ஸ்பெக்டர்கள் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை