| ADDED : நவ 21, 2025 06:13 AM
கதக்: ஹிந்து இளைஞரை மூளைச்சலவை செய்து, முஸ்லிம் மதத்துக்கு மாற்றி, கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகனை மீட்டுத்தரும்படி பெற்றோர் மன்றாடுகின்றனர். கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரா நகரில் வசிப்பவர் கவி சித்தப்பா என்ற விநாயக் கனதின்னி, 17. இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்து வந்தார். சமீப நாட்களாக இவர், சரியாக கல்லுாரிக்கு செல்லவில்லை. இது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதுபற்றி மகனிடம் பெற்றோர் கேட்டனர். அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. கல்லுாரிக்கு செல்லாமல், டீக்கடை ஒன்றில் வேலை செய்வது தெரிந்தது. லட்சுமேஸ்வர் நகரில் சோஹைல், கல்லு ஆகியோர் டீக்கடை நடத்துகின்றனர். இங்கு டீ குடிக்க சென்ற கவி சித்தப்பாவிடம் நன்கு பழகி அவரை, தங்கள் கடையிலேயே பணிக்கு வைத்து கொண்டனர். இதையறிந்த பெற்றோர், டீக்கடைக்கு சென்று அவர்களை திட்டி, தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், கவி சித்தப்பா திடீரென மாயமானார். ஒன்றரை மாதமாக தேடியும் கிடைக்கவில்லை. 'டீக்கடை சோஹைலும், கல்லுவும் தங்கள் மகனை முஸ்லிம் மதத்துக்கு மாற்றியுள்ளனர். அவரை, எங்கோ அடைத்து வைத்துள்ளனர். மகனை கண்டுபிடித்துத் தர வேண்டும்' என, லட்சுமேஸ்வர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.