உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தண்டவாளத்தில் குதித்த பயணி மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் குதித்த பயணி மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

இந்திரா நகர்: கீழே விழுந்த டோக்கனை எடுப்பதற்காக, தண்டவாளத்தில் பயணி ஒருவர் குதித்ததால், மெட்ரோ ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பெங்களூரு இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று காலை 9:20 மணிக்கு, பயணியர் அதிகளவில் இருந்தனர். அப்போது பயணி ஒருவர் வைத்திருந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் டோக்கன், அவரது கையில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தது. உடனே, அவர் அதை எடுக்க, தண்டவாளத்தில் குதித்தார். இதை பார்த்த, மெட்ரோ ரயில் ஊழியர்கள், உடனடியாக அவசர பயண தடுப்பு அமைப்பு மற்றும் அவசர நிறுத்த பொத்தானை அழுத்தினர். இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அத்துடன் தண்டவாளத்தில் இறங்கிய பயணியும் பத்திரமாக மீட்கப்பட்டார். பின், மெட்ரோ ஊழியர்கள், தண்டவாளத்தில் குதித்த பயணியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், இளஞ்சிவப்பு வழிப்பாதையில், 10 நிமிடம் மெட்ரோ போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலையில் பரபரப்பான நேரம் என்பதால், அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணியர் கூட்டம் அதிகரித்தது. மீண்டும் ரயில் சேவை 9:30க்கு பின் தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !