உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சென்னப்பட்டணா பொது மருத்துவமனையில் பழுதடைந்த ஏசியால் நோயாளிகள் அவதி

சென்னப்பட்டணா பொது மருத்துவமனையில் பழுதடைந்த ஏசியால் நோயாளிகள் அவதி

ராம்நகர் : சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலின் போது, முதல்வர் உட்பட அமைச்சர்கள் அளித்த வாக்குறுதி பொய்யானது. சென்னப்பட்டணா மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாமல், நோயாளிகள் பரிதவிக்கின்றனர். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, முன்னாள் முதல்வர் குமாரசாமி வெற்றி பெற்று, மத்திய அமைச்சரானார். இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த, பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதி காலியானது. இதில் காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வர் களமிறங்கியிருந்தார். அவருக்கு ஆதரவாக, காங்கிரசின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்னப்பட்டணாவில் முகாமிட்டனர். முதல்வரும் கூட பிரசாரத்துக்கு வந்து சென்றார். பிரசாரத்தின் போது, சென்னப்பட்டணா பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். அடிப்படை வசதிகள் செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால், வெற்றி பெற்ற பின், வாக்குறுதியை மறந்துவிட்டனர். சென்னப்பட்டணா பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஐ.சி.யு., பிரிவில் 'ஏசி'க்கள் பழுதடைந்துள்ளன. மின் விசிறிகளும் செயல்படவில்லை. காற்று இல்லாமல் நோயாளிகள் பரிதவிக்கின்றனர். அட்டை, டவலால் விசிறி கொள்கின்றனர். சிலர், தங்கள் வீட்டில் இருந்து, மின் விசிறி கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். மழை பெய்தால் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து, 'ஏசி'க்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை இன்னும் சரி செய்யவில்லை. ஊடகங்கள் மூலமாக தகவல் அறிந்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் மின் விசிறி ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை. கழிப்பறை அசுத்தமாக உள்ளது. சென்னப்பட்டணா பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரி ரகுராம் கூறியதாவது: ' ஏசி'க்கள் பழுதடைந்ததால், ரிப்பேர் செய்பவருக்கு போன் செய்து, மருத்துவமனைக்கு வந்து சரி செய்யும்படி கூறினேன். அவரும் விரைவில் வந்து 'ஏசி'க்களை ரிப்பேர் செய்வதாக கூறியிருந்தார். நான் அவருக்கு போன் செய்து, தகவல் கூறிவிட்டு பணி நிமித்தமாக பெங்களூருக்கு சென்றிருந்தேன். ரிப்பேர் செய்யும் நபர் வரவில்லை என்பது, எனக்கு தெரியவில்லை. அவரை உடனடியாக வரவழைத்து, 'ஏசி'க்களை சரி செய் ய வைக்கிறேன். அதுவரை மின் விசிறி வசதி செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ