பெண்ணுக்கு பாலியல் தொல்லை பெங்., பல்கலை பேராசிரியர் கைது
பசவேஸ்வராநகர்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பெங்களூரு பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, ஞானபாரதியில் உள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியராக மைலாரப்பா பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர். கர்நாடக மாநில ஹரிஜன சேவா என்ற பெயரில் சங்கம் நடத்துகிறார். இந்த சங்கத்தில் 2022ல் 37 வயது பெண் ஒருவர் உறுப்பினராக சேர்ந்தார். 2023ல் பெண்ணின் கணவர் மர்மமான முறையில் இறந்தார். இந்த விவகாரத்தில் பெண் மீது, கணவர் குடும்பத்தினர், மகாலட்சுமி லே - அவுட் போலீசில் புகார் செய்தனர். பெண்ணுக்கு ஆதரவாக மைலரப்பா இருந்தார். சட்ட உதவிகளை செய்தார். இந்நிலையில் பெண்ணிற்கும், அவரது சகோதரருக்கும் தந்தையின் சொத்தை பிரிக்கும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. இந்த விஷயத்திலும் உதவி செய்வதாக பெண்ணிடம் மைலாரப்பா கூறினார். உதவி என்ற பெயரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி மைலாரப்பா கூறி உள்ளார். இதனால் அவரிடம் இருந்து பெண் விலக ஆரம்பித்தார். சில நாட்களுக்கு முன்பு பசவேஸ்வராநகரில் பெண்ணை மைலாரப்பா சந்தித்தார். 'என் வாழ்க்கையில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதற்கு வக்கீல் ரகு தான் காரணம்' என்று எழுதிய பத்திரத்தை கொடுத்து, கையெழுத்திடும்படி பெண்ணிடம் கூறினார். இதற்கு மறுத்ததால், நடுரோட்டில் அவரை தாக்கியதுடன் மானப்பங்கப்படுத்தி உள்ளார். மேலும் பெண்ணின் வீட்டிற்கு சென்று பிரச்னை செய்துள்ளார். இதுகுறித்து கடந்த 9ம் தேதி பசவேஸ்வராநகர் போலீசில் பெண் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். மைலாரப்பாவை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மைலாரப்பா மீது காமாட்சிபாளையா போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.