| ADDED : டிச 02, 2025 04:22 AM
குடகு: காபி எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன 2 வயது சிறுமியை, வளர்ப்பு நாய் கண்டுபிடித்தது. குடகு மாவட்டம் விராஜ்பேட் தாலுகா கொங்கனா கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில், கூலி தொழிலாளியாக பணியாற்றுபவர் சுனில்; அவரின் மனைவி நாகினி. இத்தம்பதியின் மகள், சுனன்யா, 2. தம்பதியர் பணிக்கு செல்லும் போது, வீட்டருகில் வசிக்கும் மற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுடன் மகளை விட்டுச் செல்வது வழக்கம். அதேபோல, கடந்த, 29ம் தேதி சக தொழிலாளர்களின் பிள்ளைகளுடன் மகளை விளையாட விட்டு விட்டு பணிக்கு சென்றனர். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மகள் சுனன்யாவை காணவில்லை. மற்ற பிள்ளைகளிடம் விசாரித்த போது, அவர்களும் தங்களுக்கு தெரியவில்லை என்றனர். சக தொழிலாளர்களுடன் சேர்ந்து, சுனிலும், நாகினியும் மகளை தேடினர்; கண்டுபிடிக்க முடியவில்லை. எஸ்டேட் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து, கோணிகொப்பலு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் அங்கு வந்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவலறிந்து வனத்துறையினரும், எஸ்டேட்டுக்கு வந்து சிறுமியை தேடத் துவங்கினர். எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தேடும் போது, புலியின் கால் தடங்கள் தென்பட்டன. மனித உடலில் பாதி மட்டும் கிடந்ததை பார்த்து பீதியும் அடைந்தனர். சிறுமியை தேடும் பணியில் கிராமத்தினரும், பி.ஷெட்டிகேரி கிராம பஞ்சாயத்து தலைவர் கொல்லர போபண்ணா, அவரது நண்பர் அனில் காளப்பா ஆகியோரும் ஈடுபட்டனர். அனில் காளப்பா, தன் வளர்ப்பு நாய்களை தேடும் பணிக்கு அழைத்து சென்றார். நாய்கள் எஸ்டேட்டை சுற்றி வந்து தேடின. நேற்று காலையில் எஸ்டேட்டில் உயரமான இடத்தில் காபி செடிகளை பார்த்து, வளர்ப்பு நாய் ஓரியா குரைத்தது. கிராமத்தினரும், மற்றவர்களும் அங்கு சென்று பார்த்த போது, செடிகளுக்கு நடுவில் சிறுமி அமர்ந்திருந்தார். இரண்டு நாட்களாக உணவு, நீரின்றி சோர்ந்து காணப்பட்டார். அவரை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.