உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விநாயகர் சதுர்த்தி, மிலாது நபியில் டிஜேக்களுக்கு தடை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

விநாயகர் சதுர்த்தி, மிலாது நபியில் டிஜேக்களுக்கு தடை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி பண்டிகையின் போது 'டிஜே'க்கள் பயன்படுத்த கூடாது என்ற பெங்களூரு மேற்கு பிரிவு இணை போலீஸ் கமிஷனர் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பெங்களூரு மேற்கு பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், 'விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி பண்டிகையின் போது 'டிஜே'க்கள் பயன்படுத்த கூடாது, ஸ்பீக்கர் அளவு, காலை நேரத்தில் 55 டெசிபலிலும், இரவு நேரத்தில் 45 டெசிபலிலும் ஒலி இருக்க வேண்டும்' உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக லைட் மியூசிக் மற்றும் கலாசார கலைஞர்கள் சங்கத்தின் சங்கர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சங்கர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'பெங்களூரு மேற்கு பிரிவு இணை போலீஸ் கமிஷனர், கடந்த 14ம் தேதி வெளியிட்ட உத்தரவு, அரசியலமைப்பு பிரிவு 19 (1) (ஜி) ன் கீழ், மனுதாரருக்கு கிடைக்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். ஒருபுறம் அதிக ஒலி எழுப்பும் சாதனங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் எந்த தடையும் இல்லை. ஆனால், அவற்றை பயன்படுத்துவதில் மட்டும் கட்டுப்பாடு உள்ளது. எனவே ஒலி மாசு விதி - 2000க்கு விதிமுறைகள் அமல்படுத்த, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்றார். இதற்கு நீதிபதிகள் கூறியதாவது: குடியிருப்பு பகுதிகளில் காலை நேரத்தில் 55 டெசிபலுக்கு குறைவாகவும், இரவு நேரத்தில் 45 டெசிபலுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. பொது இடங்களில் டிஜேக்கள், ஒலி பெருக்கிகள் அதிக ஒலியுடன் பயன்படுத்துவதற்கு இணை போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை. எனவே, இணை போலீஸ் கமிஷனரின் சுற்றிக்கை எதிராக தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ