உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தே.ஜ., கூட்டணி முத்திரையுடன் ம.ஜ.த.,வை வளர்க்க திட்டம்

தே.ஜ., கூட்டணி முத்திரையுடன் ம.ஜ.த.,வை வளர்க்க திட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி என்ற முத்திரையுடன் நரேந்திர மோடியின் சாதனையை உச்சரித்து, தங்கள் சக்தியை அதிகரிக்க அதன் கூட்டணி கட்சியினரான ம.ஜ.த.,வினர் தயாராகி வருகின்றனர். மாநிலம் முழுதும் தங்கள் கட்சியை வளர்க்க ம.ஜ.த.,வினர் திட்டம் வகுத்துள்ளனர். துமகூரில் மாநில அளவிலான பிரசாரத்தை துவங்கி, மாவட்டங்கள் தோறும் பேரணிகளை நடத்தி வருகின்றனர். பேரணிகள் கோலார், சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் நடந்த ம.ஜ.த., பேரணிகள், ஆளும் காங்கிரசுக்கு சவாலா அல்லது பா.ஜ.,வை விட செல்வாக்கில் குறைந்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கவா என்பது தெரியவில்லை. கடந்த 2018 சட்டசபை தேர்தலின்போது, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் முதல்வர் சித்தராமையா வெற்றி பெற்ற பாதாமி தொகுதியில் நடத்திய பேரணி, ஒரு முக்கிய மைல் கல் என, ம.ஜ.த.,வினர் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். காங்கிரஸ் அரசில் முதல்வர் பதவிக்கு மோதல், வாக்குறுதி திட்டங்களால் நிதி தட்டுப்பாடு, முறைகேடு உள்ளிட்டவற்றால் மக்கள் சலிப்படைந்து விட்டதாக ம.ஜ.த., குரல் எழுப்பி வருகிறது. வரும் 2028 சட்டசபை தேர்தலில், கர்நாடக மக் கள் நிச்சயமாக ஒரு மாற்றத்தை தேடுவர். இது, நம் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பது அக்கட்சியின் எண்ணமாக உ ள்ளது. இதற்காகவே குமாரசாமி, தன் மகனை உசுப்பி விட்டுள்ளார். அவரும் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணம் கட்சியை வலுப்படுத்துவதற்காக என கூறிக் கொண்டாலும், திரளும் கூட்டத்தை வைத்து, அடுத்த சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பா.ஜ.,விடம் கேட்டுப் பெற முடியும் என்றும் ம.ஜ.த.,வினர் கணக்கு போடுகின்றனர். அமித் ஷா இதை உறுதி செய்வது போல, 'தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவோம்; கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவோம்' என, ம.ஜ.த.,வினர் பேசி வருகின்றனர். இதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ., தொகுதிகளில் ம.ஜ.த.,வை வளர்த்தெடுக்க அக்கட்சியினர் முழு மூச்சாக பாடுபடுகின்றனர். உதாரணமாக பா.ஜ., வசம் இருந்த கோலார் லோக்சபா தொகுதியை சுட்டிக்காட்டலாம். பா.ஜ., பிணைப்பால் ம.ஜ.த., வலுவாகி வருவதாக அக்கட்சி கருதுகிறது. இதை உணர்ந்துள்ள பா.ஜ., பொதுச் செயலர் பி.ராஜிவ், ''ம.ஜ.த., அதன் வலிமையை மீட்டெடுக்க திட்டமிடுவதற்கு உரிமை உள்ளது. நாங்களும் எங்கள் யுக்திகளில் கவனம் செலுத்துகிறோம்,'' என தெரிவித்துள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை