பெங்களூரு: பெங்களூரு முழுதும் 1,000 இரும்பு குப்பைத் தொட்டிகள் வைக்க பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., எனும் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: பொது மக்கள் கண்ட கண்ட இடங்களில், குப்பை கொட்டுவதை தவிர்க்கும் நோக்கில், பெங்களூரின், பல்வேறு இடங்களில் இரும்பு குப்பை தொட்டிகள் வைக்க, திட்டம் வகுத்துள்ளோம். ஒரு தனியார் நிறுவனம், 1,000 இரும்பு குப்பைத் தொட்டிகளை, நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. தொட்டிகளில் ஈரமான குப்பை, உலர்ந்த குப்பையை போட, தனித்தனி இடம் இருக்கும். பொது இடங்களில் குடிநீர் பாட்டில்கள், சிப்ஸ், சாக்லேட் கவர்கள், டிஷ்யூ பேப்பர்கள் என, உலர்ந்த குப்பையை போட, தேவையான இடவசதி இல்லாததால், மக்கள் சாலைகளில் வீசுகின்றனர். எனவே இரும்பு குப்பை தொட்டிகள் வைத்தால் உதவியாக இருக்கும். பஸ் நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், முக்கியமான சாலைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படும். தனியார் நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்கின்றன, இரும்பு குப்பைத் தொட்டிகள் வழங்கியவுடன் தேவையான இடங்களில் வைப்போம். இதற்கான இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன. சாலை ஓரங்களில் ஈரமான குப்பையை விட, உலர்ந்த குப்பை அதிகம் காணப்படுகிறது. உலர்ந்த குப்பையை அதிக அளவில் சேகரிக்கும் வகையில், இரும்பு தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் போடப்படும் குப்பையை, பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., அவ்வப்போது அப்புறப்படுத்தும். முதற்கட்டமாக 1,000 இரும்பு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். அதன்பின் மேலும் பல இடங்களில் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.