உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மங்களூரில் விமான விபத்து மீட்பு பணி ஒத்திகை தத்ரூபம்

மங்களூரில் விமான விபத்து மீட்பு பணி ஒத்திகை தத்ரூபம்

மங்களூரு: விமான விபத்து ஏற்படும் போது, மீட்பு பணிகளை துரிதப்படுத்துவது, பல்வேறு அரசு துறைகளின் ஒருங்கிணைப்பை பலப்படுத்துவது தொடர்பான, கூட்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகை நேற்று மங்களூரு விமான நிலையத்தில் நடந்தது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் வழிகாட்டுதலின் படி, தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் இணைந்து பேரிடர் மேலாண்மை ஒத்திகையை நேற்று நடத்தின. தட்சிண கன்னடா மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குருபுரா ஆற்றங்கரை பகுதியை ஒட்டிய திறந்தவெளி மைதானத்தில், விமானம் விபத்துக்கு உள்ளானது போன்ற சூழல் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. மங்களூரிலிருந்து, 117 பயணியர், 6 விமானிகளுடன் மும்பை நோக்கி சென்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக குருபுரா ஆற்றங்கரையில் விபத்துக்கு உள்ளானது என பொய்யான தகவல் பரப்பப்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே விமான நிலைய தீயணைப்பு, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட மீட்பு பணிகளை துவக்கினர். இதைத்தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு துறை, போலீஸ், மருத்துவர்கள் குழு இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களை போல நடித்தவர்கள், ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்வதற்காக விமான நிலைய சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஒத்திகை நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கி, 11:40க்கு முடிவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ