கூலி தொழிலாளர்கள் மீது தாக்குதல் தோட்ட உரிமையாளர்கள் மீது வழக்கு
சிக்கமகளூரு: தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தியதுடன், அவர்களை கொடூரமாக தாக்கிய காபி தோட்ட உரிமையாளர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. சிக்கமகளூரு நகரின், பசகோடு கிராமத்தில் வசிக்கும் பரத் மற்றும் சத்ய கீர்த்தி, காபி தோட்டம் வைத்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் கூலி தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தோட்ட உரிமையாளர்கள், சரியாக ஊதியம் கொடுக்கவில்லை. கொத்தடிமைகளாக நடத்தினர். ஓய்வு எடுக்க விடாமல் கொடுமைப்படுத்தினர். தொழிலாளர் நேற்று முன்தினம் ஊதியம் கேட்டதால், அவர்களை தோட்ட உரிமையாளர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டினர். பெண்கள் உட்பட, மற்ற தொழிலாளர்களை உருட்டுக்கட்டையால் கொடூரமாக தாக்கினர். பெண்கள் கீழே விழுந்து, கதறியும் விடவில்லை. இதை பார்த்த சிலர் தங்கள் மொபைல்போனில் பதிவு செய்து வெளியிட்டனர். இதை பார்த்த பலரும், காபி தோட்ட உரிமையாளர்களை கைது செய்யும்படி வலியுறுத்துகின்றனர். தாக்குதலில் காயமடைந்த தொழிலாளர்கள், சிக்கமகளூரின், அரளுகுப்பே மல்லேகவுடா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை, போலீசாரும் பார்த்துள்ளனர். கூடுதல் எஸ்.பி., ஜெயகுமார், நேற்று மருத்துவமனைக்கு சென்று, தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பெண் தொழிலாளர்களுக்கு, தோட்ட உரிமையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தோட்ட உரிமையாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய போலீசார் தயாராகின்றனர். இது குறித்து, சிக்கமகளூரு எஸ்.பி., ஜிதேந்திர குமார் தயாமா கூறியதாவது: காபி தோட்டத்தில் பணியாற்ற, தமிழகத்தில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தோட்ட உரிமையாளர்கள், சரியாக ஊதியம் வழங்கவில்லை. அதிகமான வேலை வாங்கியுள்ளார். நேற்று மாலை தொழிலாளர்கள், ஊருக்கு திரும்ப முற்பட்ட போது, தோட்ட உரிமையாளர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, மல்லந்துார் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களை தாக்கிய நபர்களை, விரைவில் கைது செய்வோம். இவ்வாறு கூறினார்.