பெங்களூரு: ''பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியும் பெங்களூரு சுரங்கப்பாதை திட்டத்தை பாராட்டி உள்ளனர்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெங்களூரில் 'டபுள் டெக்கர்' சுரங்கப்பாதை திட்டத்தின் வரைபடத்தை பார்த்த பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் பாராட்டி உள்ளனர். அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பெங்களூருக்காக பாடுபடுகிறோம். புனே, மும்பை, டில்லியிலும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு உள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் எதிர்க்கின்றனர். மாநில வளர்ச்சிக்கு பா.ஜ., எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதால், அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். ஊடகங்கள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. அதில் உள்ள நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வோம். தவறு இருந்தால், சரி செய்ய தயாராக இருக்கிறோம். மாநிலத்தின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி பெற, மத்திய அரசு போராடி வருகிறது. மாநில பிரதிநிதிகளாக உள்ள எம்.பி.,க்கள், அநீதிக்கு எதிராக போராட வேண்டும். மகதாயி, மேகதாது, எத்தினஹொளே உட்பட மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு அழைத்து செல்லப்படும். மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா வீட்டுக்கு சென்றபோது, 'இவ்விஷயம் குறித்து லோக்சபா கூட்டத்தொடரின் போது, எம்.பி.,க்கள் பேச வேண்டும்' என்று தெரிவித்தார். அவர், ஜல் சக்தி துறை அமைச்சராக இருப்பதால், அவர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. எத்தினஹொளே திட்டம் தொடர்பாக, பல சர்ச்சைகள் எழுந்து உள்ளன. ஒரு பகுதியில் உள்ள மண் எடுத்து, மற்றொரு பகுதியில் கொண்டு சென்றால், மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பர். எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.