தற்கொலை செய்து மோட்சம் பெற திட்டம்: 21 பேரை திருப்பியனுப்பிய போலீசார்
பெலகாவி: ஆன்மிக வழிகாட்டியான சாதுராம் பாலால் துாண்டப்பட்ட 21 பேர், தற்கொலை செய்து உயிர் தியாகம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பினர். ஹரியானாவை சேர்ந்த சாதுராம் பால் என்பவர், தன்னை ஆன்மிக வழிகாட்டி என கூறி கொள்கிறார். 2014ல் கிரிமினல் வழக்கில், முக்கிய குற்றவாளியாக இருந்தார். இவரை கைது செய்வதற்காக, ஹரியானாவில் உள்ள இவரது ஆசிரமத்துக்கு போலீசார் சென்றிருந்தனர். இதற்கு அங்கிருந்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கலவரம் ஏற்பட்டது. 18 மாத குழந்தையும், ஐந்து பெண்களும் ஒரு அறையில் அடைக்கப்பட்டனர். இதில் மூச்சுதிணறி அவர்கள் உயிரிழந்தனர். போலீசார் உட்பட பலர் காயம் அடைந்தனர். இந்த கலவரத்துக்கு அழைப்பு விடுத்தது, ராம்பால் என்பது தெரிந்தது. இவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர், தற்போது ஹரியானாவின் ஹிஸ்ஸார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் உடல் ஆரோக்கியத்தை காரணம் காட்டி, இரண்டு முறை பரோலில் வெளியே வந்தார். இவர் விசித்திரமான போதனைகள் மூலமாக, பிரசித்தி பெற்றவர். ஹிந்துக்கள் பூஜிக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன் உட்பட எந்த கடவுளும், உண்மையான கடவுளே இல்லை. இவர்களும் சாதாரண மனிதர்கள் என பிரசாரம் செய்தார். இவர் எழுதிய புத்தகங்களை படித்து, உரைகளை கேட்டு பலர் அவரது பக்தர்களாகினர். மக்கள் தாங்களாக முன் வந்து, உயிர் தியாகம் செய்தால், கடவுள் பூமிக்கு வந்து, நம்மை அழைத்து செல்வார் என, கூறியிருந்தார். இதை படித்த அவரது பக்தர்கள், உயிர் தியாகம் செய்து, மோட்சம் செல்ல விரும்பினர். பெலகாவி, சிக்கோடியின், ஆனந்தபுரா கிராமத்தின் நால்வர் உட்பட, 21 பேர் ஆனந்தபுரா கிராமத்தில் தங்கியிருந்தனர். செப்டம்பர் 8ம் தேதியன்று, தற்கொலை செய்து, உயிர் தியாகம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதையறிந்த கிராமத்தினர், சிக்கோடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நேற்று காலை போலீசார் அங்கு வந்தனர். 21 பேருக்கும் புத்திமதி கூறினர். 'உயிர் தியாகம் செய்தால், கடவுள் வந்து அழைத்து செல்வார் என்பது மூட நம்பிக்கை' என, அறிவுறுத்தி மனதை மாற்றி, அவரவர் ஊர்களுக்கு அனுப்பினர்.