பிரஜ்வல் 2வது ஜாமின் மனு ஏப்., 7க்கு ஒத்திவைப்பு
பெங்களூரு : பாலியல் வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, இரண்டாவது முறையாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, ஹொளேநரசிபுராவில் உள்ள தன் வீட்டு வேலை செய்து வந்த பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 2,144 பக்கங்கள், 150 சாட்சிகளின் வாக்குமூலங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2வது மனு
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி பிரஜ்வல் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தற்போது ஜாமின் கேட்டு மீண்டும் இரண்டாவது முறையாக, அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இம்மனு, நேற்று தனி நீதிபதி பிரதீப் சிங் யெரூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பிரஜ்வல் தரப்பில் வழக்கறிஞர் பிரபுலிங்க நவதாகி வாதிட்டார்.மாநில அரசு சார்பில் கூடுதல் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜெகதீஷ் வாதிடுகையில், ''இது தொடர்பாக, தலைமை நீதிபதியின் உத்தரவை பெறுவது பொருத்தமாக இருக்கும்,'' என்றார்.இதற்கு நீதிபதி பிரதீப் சிங் யெரூர் கூறியதாவது:இந்த அமர்வு, முன்னாள், தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு அமர்வாகும். மனுதாரர் மனு மீது ஏதேனும் சட்ட சிக்கல்கள் இருந்தால், அடுத்த விசாரணையில் அவற்றை எழுப்பலாம்.புகார்தாரரை, இதில் பிரதிநிதியாக சேர்த்து, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். இவ்வழக்கு விசாரணை, ஏப்., 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பலாத்கார வழக்கில், விசாரணை நீதிமன்றம் இரண்டு முறையும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு முறையும், உச்ச நீதிமன்றம் ஒரு முறையும் பிரஜ்வலின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளன.தற்போது மீண்டும் புதிய காரணங்களை குறிப்பிட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு இரண்டாவது முறையாக பிரஜ்வல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.