யது வம்சத்து குலதெய்வம் சாமுண்டீஸ்வரி காங்., அரசுக்கு பிரமோதா தேவி பதிலடி
பெங்களூரு: ''அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். சாமுண்டி மலை ஹிந்துக்களுக்கு சொந்தமானது. சாமுண்டீஸ்வரி, யது வம்சத்தின் குல தெய்வம்,'' என அரச குடும்பத்தின் பிரமோதா தேவி தெரிவித்தார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். அவர்கள் கூறியவுடன் எதுவும் நடந்துவிடாது. சாமுண்டி மலை, ஹிந்துக்களை சார்ந்தது. சாமுண்டீஸ்வரி தேவி, ஹிந்துக்களின் தேவதை. யது வம்சத்தின் குலதெய்வம். இந்த கோவிலில் ஹிந்துக்களின் சம்பிரதாயப்படி, பூஜை, புனஸ்காரங்கள் நடக்கின்றன. கோவில் விஷயத்தில், நீதிமன்றத்தில் போராட்டம் நடக்கிறது. சாமுண்டீஸ்வரி மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல. நீதிமன்ற உத்தரவு வெளியான பின், அனைத்தும் சரியாகும். 70 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடக்கிறது. கோவிலை அரசியலுக்கு பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது. ஜனநாயக நடைமுறையில், அரசுகள் மாறும். அரசு சார்பில் நடக்கும் தசரா நிகழ்ச்சிகள், எங்கள் பரம்பரையின் அங்கம் அல்ல. தசரா திருவிழாவை துவக்கி வைப்பவர் விஷயத்தில், நான் கருத்து கூற எதுவும் இல்லை. தன் விருப்பத்தின்படி, அரசு தசரா நடத்துகிறது. அதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தசரா விஷயத்தில், இதுவரை நடந்துள்ள அரசியலே போதும். இனியும் தொடர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.