2வது திருமணத்துக்கு முயற்சி கணவர் மீது கர்ப்பிணி புகார்
துமகூரு: தன் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, ஆறு மாத கர்ப்பிணி போலீசில் புகார் செய்துள்ளார். துமகூரு மாவட்டம், பாவகடா தாலுகாவை சேர்ந்த இளம் பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த பொம்மநாயக், 30, என்பவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணமானது. தற்போது, இளம் பெண் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், பொம்மநாயக் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அப்பெண்ணை, அவர் இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இதற்கு, அவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, துமகூரு மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். புகாரில், 'நாங்கள் இருவரும் வெவ்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள். இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்தோம். தற்போது, நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்த சமயத்தில், எனது கணவர் வீட்டார், ஜாதிய ரீதியாகவும், வரதட்ணை கேட்டும் கொடுமைப்படுத்துகின்றனர். எனது கணவரும் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். எனவே, எனக்கு நீதி வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொம்மநாயக் உட்பட அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.