இளைய மகனுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெறு மாமியார் தொல்லையால் பேராசிரியை தற்கொலை
தொட்டபல்லாபூர்: குழந்தை வேண்டுமென்றால் தன் இளைய மகனுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெறுமாறு மாமியார் ஆபாசமாக பேசியதால், பேராசிரியை தடுப்பணையில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின் சோத்தேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் புஷ்பாவதி, 30. இவர் தனியார் கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினார். இவருக்கும், தபசிஹள்ளி கிராமத்தில் வசிக்கும் வேணு, 35,வுக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன், திருமணம் நடந்தது. உணவில் விஷம் திருமணமான நாளில் இருந்தே, மனைவியை வேணு பொருட்படுத்தியது இல்லை; சரியாக பேசியதும் இல்லை. தாய் வீட்டில் இருந்து பணம், வீட்டு மனை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தனர். வேணுவுக்கு இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஆசை இருந்தது. இதனால் மனைவியை உணவில் விஷம் கொடுத்து, கொலை செய்ய முயற்சித்தார். புஷ்பாவதி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். இது பற்றி கணவரிடம் பேசிய போது, 'இப்போதே குழந்தைக்கு என்ன அவசரம். பின்னர் பார்த்து கொள்ளலாம்' என, மறுத்தார். கணவரின் உடலில் ஏதோ பிரச்னை இருக்குமோ என, சந்தேகித்த புஷ்பாவதி, டாக்டரிடம் செல்லலாம் என, கணவரை அழைத்தார். இதனால் கோபமடைந்த வேணு, மனைவியை தாக்கினார். ஆபாசம் இது குறித்து, மாமனார், மாமியாரிடம் கூறிய போது அவர்கள் உனக்கு குழந்தை வேண்டுமானால், எங்களின் இளைய மகனுடன் குடும்பம் நடத்தி, குழந்தை பெற்றுக்கொள் என, ஆபாசமாக கூறினர். இதனால் புஷ்பாவதி வருத்தம் அடைந்தார். இரண்டு நாட்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியேறிய அவர், தொட்டபல்லாபூரின் விஸ்வேஸ்வரய்யா தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். புஷ்பாவதியை பல இடங்களில் தேடியும், காணவில்லை. எனவே தொட்டபல்லாபூர் ஊரக போலீஸ் நிலையத்தில், குடும்பத்தினர் புகார் செய்தனர். போலீசாரும் விசாரித்த நிலையில், நேற்று காலை அவரது உடல், அணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்கொலைக்கு முன், அவர் எட்டு நிமிடம் பேசிய வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் கணவர் வீட்டினரால், தான் அனுபவித்த தொந்தரவை விவரித்திருந்தார். இதன் அடிப்படையில் இவரது கணவர் வேணு, மாமனார் கோவிந்தப்பா, மாமியார் பாரதி, மைத்துனர் நாராயணசாமி, உறவினர்கள் முத்தேகவுடா, பல்லவி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.