காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தங்கவயலில் கண்டன ஊர்வலம்
தங்கவயல்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணிரை குறி வைத்து தாக்கிய பயங்கரவாதிகளை தாக்குதலை கண்டித்து பயங்கரவாத அமைப்புக்கு எதிரான ஒற்றுமைக்குழு சார்பில், ராபர்ட்சன்பேட்டையில் நேற்று ஊர்வலம் நடந்தது.ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் இருந்து தேசியக் கொடிகளை ஏந்தியும், எரியும் மெழுகுவர்த்திகளை கையில் பிடித்துக் கொண்டும், 'வந்தே மாதரம், பாரத் மாதாவுக்கு ஜே, பயங்கரவாதம் ஒழிக' என உரத்த குரலில் கோஷங்களுடன் ஊர்வலம் புறப்பட்டது.ஊர்வலத்துக்கு கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் ஓம் சக்தி சலபதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கமல்நாதன், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்ரீதர் ராவ் சிந்தியா, ஹிந்து முன்னணி கணேஷ், பிராமணர் சங்கம் தேஷ் பாண்டே. பா.ஜ., கவுன்சிலர்கள் வேணி பாண்டியன், ரமலம்மா முன்னாள் கவுன்சிலர் கிரிஜா, விஜயகுமார், எம்.வெங்கடேஷ், நகர பா.ஜ., தலைவர் சுரேஷ் குமார், தீனா, கண்டலய்யா, காந்தி, வேலு, ஹரிஷ், சிவநாராயண சுவாமி பல்வேறு கோவில்களின் அர்ச்சகர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் சொர்ண குப்பம் சதுக்கம், கீதா சாலை, சுராஜ்மல் சதுக்கம் வழியாக சென்று காந்தி சதுக்கத்தில் நிறைவடைந்தது.