உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  100 நாள் வேலை பெயரை மாற்றும் வரை போராட்டம் தொடரும்: சித்தராமையா

 100 நாள் வேலை பெயரை மாற்றும் வரை போராட்டம் தொடரும்: சித்தராமையா

பெங்களூரு: ''மகாத்மா காந்தி தேசிய கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மீண்டும் வைக்கும் வரை நமது போராட்டம் தொடரும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மகாத்மா காந்தி தேசிய கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை, மத்திய அரசு சமீபத்தில் 'விக ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதி திட்டம்' என்று பெயரை மாற்றியது. இதற்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் காயத்ரி விஹாரில் மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று, 'மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்ட பச்சாவ் சங்கராம்' என்ற புதிய இயக்கம் தொடர்பான முன் தயாரிப்பு கூட்டம் நடந்தது. மோடி அரசு கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: 'மஹாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்ட பச்சாவ் சங்கராம்' என்பது கிராம அளவில் இருந்து மாநில அளவிலான ஒரு இயக்கம். வட மாநிலங்களில் சட்டங்களில் மாற்றம் செய்ய, விவசாயிகள் போராடியது போன்று நாமும் போராட வேண்டும். கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் செயற்ழு கூட்டம் நடந்தது. அதில், எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ., பெயரை, 'விபி ஜி ராம் ஜி' என்ற புதிய பெயரில் மாற்றியது குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி என்ற பெயரை கேட்டாலே, பா.ஜ.,வினருக்கு குமட்டுகிறது. ஏழைகளை சீரழிக்கும் வகையில் மோடி அரசு, புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இது தசரத ராம், சீதா ராம், கவுசல் ராம் அல்ல. இது மஹாத்மா காந்தியை கொன்ற நாதுராம். இச்சட்டத்தால், மாநில அரசு, 40 சதவீதம், அதாவது 2,500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். எனவே தான், 'என்.ஆர்.இ.ஜி.ஏ., எனும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவா திட்ட பச்சாவ் சங்கராம் உருவாக்கி உள்ளோம். இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது: ஏற்கனவே காந்தியை பா.ஜ.,வினர் கொன்றனர். இப்போது அவரின் பெயரையும் கொன்றுவிட்டனர். வருங்காலத்தில் ரூபாய் நோட்டில் உள்ள அவரின் படத்தையும் நீக்கிவிடுவர். இதை எதிர்த்து, அனைத்து தாலுகாக்களிலும் எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில் போராட்டம் நடத்தப்படும். பாதயாத்திரை அனைத்து மாவட்ட தலைவர்களையும் மாற்றுவது தொடர்பாக புதிய குழு அமைக்கப்படும். இதற்கான சிறப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக நாளை (இன்று) நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். பத்து நாட்களுக்குள் அனைத்து தொகுதிகளிலும் போராட்டம் நடத்த வேண்டும். கட்டாயம் பாதயாத்திரை நடத்த வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை. நான் ஷிகாரிபுராவில் நடக்கும் பாதயாத்திரையில் கண்டிப்பாக பங்கேற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை