உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இன்று முதல் மீண்டும் மழை துவக்கம்

இன்று முதல் மீண்டும் மழை துவக்கம்

பெங்களூரு : கர்நாடகாவில் இன்று முதல் 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் கன மழை பெய்யுமென, வானிலை ஆய்வு மைய் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.கர்நாடகாவில் ஜூன் முதல் வாரத்தில் துவங்கிய வேண்டிய தென்மேற்கு பருவமழை, முன்னதாக, மே மாத இறுதியில் துவங்கியது. இதுவரை மாநிலம் முழுதும் எட்டுக்கும் மேற்பட்டோர் மழை பாதிப்பால் உயிரிழந்தனர்.இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:கடலோர பகுதிகள், வட மாவட்டங்கள், தெற்கு உள்பகுதிகளில் லேசான மழை பெய்யும்.ஜூன் 11ல் பல்லாரி, தாவணகெரே, விஜயநகராவுக்கும்; ஜூன் 12ல் விஜயநகர், குடகு, தாவணகெரே, சிக்கபல்லாபூர், பல்லாரி, விஜயபுரா, கலபுரகி, பாகல்கோட், அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். மழையின்போது, ஆறுகள், கால்வாய்களை கடக்க முயற்சிக்க வேண்டாம். மூத்த குடிமக்கள், குழந்தைகள் மழை நேரத்தில் வீட்டில் இருப்பதை உறுதி செய்யுங்கள். விவசாயிகள் வயலுக்கு செல்லும் போது ஜாக்கிரதையாக செல்லவும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.கர்நாடகாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் குடகுவில், நடப்பாண்டு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலைய ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதை கருத்தில் கொண்டு, இந்திரா நகர், சாமுண்டீஸ்வரி நகர், மங்களா தேவி நகர், மல்லிகார்ஜுன நகர், தியாகராஜா காலனி ஆகிய பகுதிகளை பாதிக்கப்படுமென அடையாளம் கண்ட மடிகேரி மாநகராட்சி நிர்வாகம், அங்கு வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளது.அத்துடன், மடிகேரி நகரில் நிவாரண முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பெலகாவி மாவட்டம் சவதத்தியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. ஹருகொப்பா கிராமத்தில், விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்தது. விளைச்சல் நிலம் மூழ்கி, சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலையை கடக்க அஞ்சி, பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டனர்.ராய்ச்சூரிலும் நேற்று முன்தினம் பெய்த மழையில், பரினா படேபூர் கிராமத்தில் இருந்த பழைய பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கிராமத்தில் இருந்து வெளியேற முடியாமலும், வெளியில் இருந்து கிராமத்துக்குள் உள்ளே வர முடியாமலும் மக்கள் தவித்தனர். இதன் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான், புதிதாக கட்டும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ