வேணுகோபாலை சந்தித்த ராஜண்ணா மாநில தலைவர் பதவிக்கு துண்டு
பெங்களூரு: மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்க்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, டில்லியில் காங்கிரஸ் தேசிய பொது செயலர் வேணுகோபாலை சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், கூட்டுறவு துறை அமைச்சராக உள்ளவர் ராஜண்ணா. சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். 'கூடுதல் துணை முதல்வர் பதவிகள் உருவாக்கி, சமுதாய வாரியான தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். லிங்காயத், தலித், சிறுபான்மை சமுதாயத்தினர் துணை முதல்வராக வேண்டும்' என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தார்.லோக்சபா தேர்தலுக்கு முன்பும், ராஜண்ணாவை தொடர்ந்து பலரும் கூடுதல் துணை முதல்வர் பதவி கேட்டனர். ராஜண்ணா சமீப நாட்களாக, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி மீது கண் வைத்துள்ளார். தன்னை மாநில தலைவராக்கினால், அமைச்சர் பதவியை விட்டுத் தருவதாக பகிரங்கமாகவே கூறி, மாநில தலைவருமான, துணை முதல்வர் சிவகுமாரின் கோபத்துக்கு ஆளானார்.மாநில தலைவர் மாற்றப்படுவார் என, அவ்வப்போது ராஜண்ணா கூறுகிறார். இந்நிலையில் தன் துறை சம்பந்தப்பட்ட, பல்வேறு திட்டங்கள் குறித்து, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசிப்பதற்காக, அமைச்சர் ராஜண்ணா டில்லிக்கு சென்றுள்ளார். இங்கு காங்., தேசிய பொது செயலர் வேணுகோபாலை சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ராஜண்ணா, ஒருவருக்கு ஒரே பதவி என்ற, கட்சியின் விதிமுறைப்படி, சிவகுமாரை துணை முதல்வர் அல்லது மாநில தலைவர் பதவியில் தக்க வைத்து விட்டு, மற்றொரு பதவியில் வேறொருவரை நியமிக்கும்படி, வேணுகோபாலிடம் கோரியதாக தெரிய வந்துள்ளது.கர்நாடக காங்கிரசின் நிலவரங்களை விவரித்துள்ளார். மேல்சபையில் காலியாகும் நான்கு இடங்களில் ஒன்றை, எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். கார்ப்பரேஷன், வாரியங்களில் அஹிந்த சமுதாயத்தினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது உட்பட, பல வேண்டுகோள்களை வேணுகோபாலிடம் ராஜண்ணா வைத்துள்ளார்.