பெங்களூரின் உத்தரஹள்ளி வைஷ்ணவி லே - அவுட்டில், 'பண்டாரி பேட் ரிப்பேர் ஷாப்' என்ற பெயரில் சிறிய கடை உள்ளது. இந்த கடையில், உடைந்த கிரிக்கெட் பேட்டுகள் சரி செய்து கொடுக்கப்படுகின்றன. இக்கடையின் உரிமையாளர் ராம் பண்டாரி. பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர். கடையை பார்க்கும் போது மிக சிறிதாக இருப்பதால், இந்த கடையில் உள்ளவர்களுக்கு கிரிக்கெட் பேட்டுகளை எப்படி சரி செய்ய தெரியும் என்ற எண்ணம் ஏற்படும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்றார்போல, கடை சிறிதாக இருந்தாலும் அங்கு நடக்கும் வேலை தரமாக உள்ளது. சச்சின், தோனி கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த மகேந்திர சிங் தோனி, நட்சத்திர வீரர் விராட் கோலி, மனிஷ் பாண்டே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் உடைந்த பேட்டுகளை, ராம் பண்டாரி சரி செய்து கொடுத்து உள்ளார். மேலும் கிரிக்கெட்டின் பேட்டின் உயரம் என்ன அளவு இருக்க வேண்டும்; வீரர்கள் விரும்பும் பேட் ஹேண்டில் அளவு என்ன என்பது உட்பட பல நுணுக்கங்களையும் ராம் பண்டாரி அறிந்து வைத்து உள்ளார். பட்டப்பெயர் பேட்டுகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வதால் அவருக்கு, 'பேட் டாக்டர்' என்ற பட்டப்பெயரும் உள்ளது. பிரபல வீரர்களின் பேட்டுகளை சரி செய்து கொடுத்தாலும், எந்தவித பந்தாவும் இன்றி மிகவும் எளிமையாகவே ராம் பண்டாரி காணப்படுகிறார். இவர் 15 வயது சிறுவனாக இருந்த போது, தாத்தாவிடம் இருந்து தச்சு வேலை கற்று கொண்டார். ஒரு கட்டத்தில் பீஹாரில் இருந்து சென்னைக்கு சென்றவர், அச்சகத்தில் வேலை செய்தார். அங்கு கிடைத்த பணத்தில் மும்பை செல்ல வேண்டும் என்று நினைத்து உள்ளார். ஆனால், தவறுதலாக பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறி இங்கு வந்தார். கிரிக்கெட் விளையாடும் ஆர்வமும் இருந்தது. பாரில் இரவில் பவுன்சராக வேலை செய்த போது, பகல் முழுதும் அவரால் கிரிக்கெட் விளையாட முடிந்தது. பார் உள்ள கட்டடத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை இருந்தது. ராம் பண்டாரிக்கு தச்சு தொழில் தெரியும் என்பதால், அவரிடம் இரண்டு பேட்டுகளை கொடுத்து அதை முறையாக செதுக்கி தரும்படி கூறி உள்ளனர். பேட்டுகளை சிறப்பாக செதுக்கி உள்ளார். குறைந்த பணம் அவருக்கு பாராட்டு கிடைத்தது. பின், தச்சு வேலையில் மீண்டும் இறங்கிய அவர், சிறிதாக கடை வைத்து உடைந்த பேட்டுகளை சரி செய்து கொடுப்பது; புதிய பேட்டுகளை உருவாக்குவது போன்ற பணிகளை செய்தார். தற்போதைய இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ராகுல், முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா போன்றோருக்கும், ராம் பண்டாரி பேட்டுகளை வடிவமைத்து கொடுத்து உள்ளார். வீரர்கள் விரும்பும்படியும், அவர்கள் அடித்து ஆடுவதற்கு ஏற்றவாறும் பேட்டுகள் தன்மையை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார். தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கு பேட் சரி செய்து கொடுப்பது பற்றி ஒரு முறை கூட ராம் பண்டாரி சொன்னதே இல்லை. தன் செய்த பணிக்கு எவ்வளவு பணமோ அதை மட்டுமே வாங்குகிறார்; கூடுதலாக ஒரு ரூபாய் கூட வாங்குவது இல்லை. - நமது நிருபர் -