இளம்பெண்ணுக்கு தொல்லை ரேபிடோ ஓட்டுநர் கைது
வில்சன் கார்டன்: 'ரேபிடோ' பைக்கில் பயணம் செய்தபோது, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 'ரேபிடோ' ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, வில்சன் கார்டனில் உள்ள பி.ஜி., தங்கி இருக்கும் 24 வயது இளம்பெண், கடந்த 6ம் தேதி சர்ச் தெருவில் இருந்து, பி.ஜி.,க்கு செல்ல 'ரேபிடோ' பைக் முன்பதிவு செய்தார். பைக்கில் ஏறியதில் இருந்து, இளம்பெண் தொடை மீது கையை வைத்தபடியே, 'ரேபிடோ' ஓட்டுநர் பைக் ஓட்டினார். சிறிது நேரத்தில் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், 'அண்ணா என்ன செய்கிறீர்கள்? கையை எடுங்கள்' என்று கேட்டபோதும், ஓட்டுநர் கேட்கவில்லை. ஓட்டுநர் செய்கையை வீடியோவில் பதிவு செய்த இளம்பெண், தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், பைக்கில் இருந்து இறங்கிய கண்ணீர் விட்டார். பைக்கில் பயணம் செய்ததற்கு, டிரைவருக்கு பணம் கொடுத்தார். அவர் அழுது கொண்டிருப்பதை பார்த்து அங்கு வந்த ஒருவர், அவரிடம் விசாரித்தார். தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் பற்றி, இளம்பெண் கூறினார். அந்த நபர், 'ரேபிடோ' ஓட்டுநரை எச்சரித்தார். மன்னிப்பு கேட்ட ஓட்டுநர், அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் இளம்பெண்ணை பார்த்து நடுவிரலை நீட்டி மிரட்டியபடி சென்றார். இந்த மோசமான அனுபவம் குறித்து, இளம்பெண், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வில்சன் கார்டன் போலீசார், இளம்பெண்ணை கண்டறிந்து, புகாரை பெற்றனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் 'ரேபிடோ' ஓட்டுநர் லோகேஷை நேற்றிரவு கைது செய்தனர்.