தகுதியற்ற பி.பி.எல்., பயனாளிகள் நீக்கம்: மேல்சபையில் அமைச்சர் முனியப்பா அறிவிப்பு
பெங்களூரு : ''சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால், பி.பி.எல்., கார்டுகளில் உள்ள தகுதியற்ற பயனாளிகள், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்ற, விரைவில் பணிகளை துவக்குவோம்,'' என, மாநில உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார். மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் நாகராஜ் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் முனியப்பா கூறியதாவது: இதற்கு முன்பு பி.பி.எல்., கார்டுகளை ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்ற, உணவுத்துறை முன் வந்தபோது, பெரும் விவாதமே ஏற்பட்டது. இந்த சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தால், பி.பி.எல்., கார்டில் உள்ள தகுதியற்ற பயனாளிகள் ஏ.பி.எல்., கார்டுக்கு மாற்றப்படுவர். துறை ஆய்வு எங்கள் துறை நடத்திய ஆய்வின்படி, 15 லட்சம் பயனாளிகள், பி.பி.எல்., கார்டுகளில் சேர்ந்துள்ளனர். தகுதியற்றோர் உணவு தானியங்கள் பெறுவதால், அரசு கருவூலத்துக்கும் சுமை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முயற்சித்தால், பிரச்னை ஏற்படுகிறது. தகுதியான பயனாளிகளை நீக்கியதாக, சிலர் அவப்பிரசாரம் செய்கின்றனர். நீங்கள் ஒப்புதல் அளித்தால், தகுதியற்ற பயனாளிகளை நீக்க, அரசு தயாராக உள்ளது. தென் மாநிலங்களிலேயே, கர்நாடகாவில் மிக அதிகமான பி.பி.எல்., பயனாளிகள் உள்ளனர். தமிழகத்தில் 50 சதவீதம், கேரளாவில் 45 சதவீதம், தெலுங்கானாவில் 50 சதவீதம், ஆந்திராவில் 50 சதவீதம் பி.பி.எல்., பயனாளிகள் உள்ளனர். ஆனால் நம் மாநிலத்தில் மட்டும், 70 முதல் 75 சதவீதம் பயனாளிகள் உள்ளனர். ஒரு பி.பி.எல்., பயனாளியை அடையாளம் காண, மாநில அரசு ஐந்து, மத்திய அரசு 11 விதிகளை நிர்ணயித்துள்ளன. இந்த விதிகளை பின்பற்றினால், பி.பி.எல்., பயனாளிகள் எண்ணிக்கை 35 சதவீதமாக குறையும். நடவடிக்கை மாநிலத்தில் ரேஷன் உணவு தானியங்கள், கள்ளச்சந்தையில் விற்போர் மீது, உணவுத்துறை திடமான நடவடிக்கை எடுத்துள்ளது. ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்கக்கூடாது என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் வந்தால், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கு முன் பி.பி.எல்., கார்டு கோரி விண்ணப்பிப்பதில் தொழில்நுட்ப பிரச்னை இருந்தது. தற்போது எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.