புலிக்குட்டியுடன் வீடியோ நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சாம்ராஜ்நகர்: புலிக்குட்டியை வைத்து வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். சாம்ராஜ் நகர் மாவட்டம், புனஜனுார் வனப்பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி தாயை பிரிந்த மூன்று புலிக்குட்டிகள் சுற்றித் திரிந்தன. இதுகுறித்து அப் பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்படி, புலிக்குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுச் சென்றனர். இந்நிலையில், மூன்று புலிக்குட்டிகளை வைத்து அப்பகுதியை சேர்ந்த சிலர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது. வீடியோவில், ஜீப்பின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி புலிக்குட்டியை நடக்க விட்டு, வாலிபர்கள் வீடியோ எடுத்து மகிழ்வது தெரிகிறது. இதற்கு சமூக ஆர்வலர் தினேஷ் கல்லல்லி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் படி, வனவிலங்குகளை தொடுவதும், புகைப்படம் எடுப்பதும் சட்ட விரோதம். ''எனவே, சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.