ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தாவணகெரே: ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., தன் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தாவணகெரே கே.டி.ஜே., நகரில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., துரை, 70. கடந்த 2014ல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் முதல் மாடியில் மகன் வசித்து வருகிறார். நேற்று காலை தரைத்தளத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. அலறியடித்து கீழே வந்த மகன், தந்தை துரை, ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறினார். தகவல் அறிந்த கே.டி.ஜே., நகர போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். துரையின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னையா அல்லது மன அழுத்தமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.