நிலம் சமன் செய்ய லஞ்சம் வருவாய் ஆய்வாளர் கைது
ஷிவமொக்கா: விவசாய நிலத்தை சமன்படுத்தும் பணிக்காக 3,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.மாவட்ட லோக் ஆயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கை:ஷிவமொக்கா மாவட்டம், சாகரின் சிரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு, இதே கிராமத்தில் சர்வே எண் 125ல் நிலம் உள்ளது. இந்த நிலம் சமமாக இல்லாமல், மேடும், பள்ளமுமாக இருந்துள்ளது. இதை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.இதையறிந்து அங்கு வந்த தலகுப்பா கிராம பஞ்சாயத்து வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாத், சமன் செய்யும் பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். 'நிலத்தை சமன் செய்ய வேண்டுமானால், எனக்கு 3,000 ரூபாய் கொடுக்க வேண்டும்' என வற்புறுத்தினார்.பணம் தருவதாக கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். ஆனால், பணம் கொடுக்க விரும்பாத அவர், லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். நாங்கள் கூறியபடி, நேற்று காலை தலகுப்பா கிராம பஞ்சாயத்துக்கு கிருஷ்ணமூர்த்தி சென்றார்.அதிகாரி மஞ்சுநாத்திடம் 3,000 ரூபாய் கொடுத்தார். அப்போது அங்கிருந்த லோக் ஆயுக்தா போலீசார், அவரை கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.