மாலுார் மதுபான கடையில் அட்டகாசம்; ரவுடிகள் கைது
மாலுார்: மாலுாரில், இலவசமாக மது வழங்காததால், மதுபான கடைகளை ரவுடிகள் துவம்சம் செய்தனர். இதுதொடர்பாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடி பட்டியலில் உள்ள சிக்கதவனஹள்ளியின் விஸ்வநாத் பிரதாப் கவுடா, 25, மற்றும் அவரது கூட்டாளிகள் எட்டு பேர் என, ஒன்பது பேர் கும்பல் தான், மதுபான கடைகளை அடித்து நொறுக்கியது என்பது தெரிந்துள்ளது. இந்நிலையில், மாஸ்தி கிராம போலீஸ் நிலைய வளாகத்தில் நேற்று எஸ்.பி., கன்னிகா சிக்ரிவால் அளித்த பேட்டி: கடந்த 8-ம் தேதி இரவு 10:00 மணிக்கு, மாஸ்தி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மாலுாரில் இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக, விஸ்வநாத் கவுடாவும், அவரது கூட்டாளிகள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளை ஒடுக்க, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.