உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடகா, ஆந்திராவில் கைவரிசை காட்டிய கொள்ளையன் ஹரியானாவில் சிக்கினான்

 கர்நாடகா, ஆந்திராவில் கைவரிசை காட்டிய கொள்ளையன் ஹரியானாவில் சிக்கினான்

கர்நாடகாவில் பஸ் பயணியரிடம், 10 கிலோ வெள்ளி மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தவரை, டில்லி போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவை சேர்ந்தவர் முகமது பர்மான், 41. தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பஸ் பயணியரிடம் திருட்டு மற்றும் கொள்ளை அடித்து வந்தார். பர்மான் தலைமையிலான கொள்ளை கும்பல் பயணியர் அல்லது பஸ் ஊழியர்கள் போல நடித்து, பயணியரின் நடமாட்டம், உடைமைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பர். பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வைத்துள்ள பயணியரின் கவனத்தை திசை திருப்பி, கொள்ளை அடித்து தப்பி விடுவர். பயணியர் அசந்து தூங்கும் அதிகாலை நேரத்தில் தான், இந்தக் கும்பல் தங்கள் கைவரிசையை காட்டும். கர்நாடக மாநிலத்தில், பஸ் பயணியரிடம் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கும்பல், டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பதுங்கியிருப்பதாக கர்நாடகாவின் குந்தாபுரா போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய உதவுமாறு, டில்லி போலீசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. டில்லி மாநகர போலீசின் தனிப்படையினர், அதிதீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஹரியானா மாநிலம் குருகிராம் சுங்கச்சாவடி அருகே பதுங்கி இருந்த முஹமது பர்மான் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கடந்த, 2022-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சுப்ரமணியம் நகர் போலீஸ் ஸ்டேஷனிலும், இவர் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கர்நாடகா மட்டுமின்றி ஆந்திர பிரதேசத்திலும் முஹமது பர்மான் தலைமையிலான கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டது குறித்து கர்நாடகா மற்றும் ஆந்திர போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கர்நாடக போலீசிடம் பர்மான் ஒப்படைக்கப்படுவார் --- நமது நிருபர்-:.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை