சிறையில் நடிகர் வீட்டில் திருட்டு
சி.கே.அச்சுக்கட்டு: கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் வீட்டில், மூன்று லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. வேலைக்காரர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் தர்ஷன். சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். தர்ஷன் மனைவி விஜயலட்சுமி. இவர், பெங்களூரு ஒசகெரேஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். கடந்த 4ம் தேதி தன் மேலாளர் நாகராஜுவிடம், மூன்று லட்சம் ரூபாயை கொடுத்து, தன் படுக்கை அறையில் உள்ள அலமாரியில் வைக்க சொன்னார். அன்றைய தினம் விஜயலட்சுமியும், நாகராஜும் மைசூருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். கடந்த 8ம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தனர். படுக்கை அறை அலமாரியில் வைக்கப்பட்டிருந்த, மூன்று லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இதுகுறித்து வீட்டு வேலைக்காரர்களிடம் கேட்டும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. பணம் திருடு போனதில் வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக, சி.கே.அச்சுக்கட்டு போலீசில் நேற்று முன்தினம் நாகராஜ் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.