பாம்புடன் படம் எடுக்க ரூ.4,000
குடகு: மஹாராஷ்டிராவை சேர்ந்த வாலிபர்கள் விகாஸ் ஜக்தாப், ஜனார்தன் போசலே. இவர்கள் இருவரும் குடகில் சில மாதங்களாக தங்கி இருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ராஜ நாகத்தை, சட்ட விரோதமாக வளர்த்து வந்தனர். ராஜ நாகத்துடன் புகைப்படம் எடுக்க ஒரு நபருக்கு 4,000 ரூபாய் வசூலித்தனர். இதையறிந்த, குடகு வனத்துறையினர் நேற்று முன்தினம் அவர்களை தேடிச் சென்றனர். வன அதிகாரிகள் வருவதை அறிந்த இருவரும், அங்கிருந்து பாம்புடன் காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து, குடகு வனத்துறை அதிகாரிகள், பெலகாவி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இருப்பினும், இரண்டு வாலிபர்களும் தப்பி மஹாராஷ்டிராவுக்கு சென்றுவிட்டனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஆய்வு செய்தபோது, பாம்புடன் பலர் எடுத்த படங்கள் கண்டெடுக்கப்பட்டது. வன சட்டத்தை மீறி, பாதுகாக்கப்பட்ட பாம்பை சிறைபிடித்து வைத்ததற்காக, அவர்கள் இருவர் மீதும் வனத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இருவரையும் பிடிக்க வனத்துறையின், மஹாராஷ்டிரா போலீசார், உதவியை நாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.