உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தரமற்ற ஹெல்மெட் விற்பனை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனை

தரமற்ற ஹெல்மெட் விற்பனை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: ஹெல்மெட்கள் கடைகளில், போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தரமற்ற ஹெல்மெட்டுகளை விற்ற கடைகளுக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சாலை விபத்துகள் நடக்கும்போது, இருசக்கர வாகனங்களின் உயிரை காப்பாற்றுவதில், ஹெல்மெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதே காரணத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள், அவரது பின்னால் அமர்ந்து வருவோரும், ஹெல்மெட் அணிவதும், அணியாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.அபராதத்துக்கு பயந்து பலரும் ஹெல்மெட் அணிகின்றனர். ஐ.எஸ்.ஐ., முத்திரை உள்ள ஹெல்மெட்களின் விலை அதிகம். எனவே பலரும் விலை குறைவான, தரமற்ற ஹெல்மெட் வாங்குகின்றனர். தடை விதிக்கப்பட்டிருந்தும் பெங்களூரில் பல்வேறு இடங்களில் தரமற்ற ஹெல்மெட்கள் விற்பதாக, தகவல்கள் வெளியாயின.எனவே பெங்களூரு நகர போக்குவரத்து போலீசார், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நேற்று பல இடங்களின் கடைகளில், அதிரடி சோதனை நடத்தினர். 19 இடங்களில் நடந்த சோதனையில், ஆறு கடைகளில் தரமற்ற ஹெல்மெட்டுகள் விற்பது தெரிந்தது. கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது; இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் பிரிவு, 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:பெங்களூரின் சித்தய்யா சாலை, கலாசிபாளையா, லால்பாக் சாலை, சுமனஹள்ளி, விஜயநகர், மாகடி சாலை, அக்ரஹாரா, நாகரபாவி, தாசரஹள்ளி, வெளிவட்ட சாலை உட்பட 19 இடங்களில் பெங்களூரு போலீசார், ஆர்.டி.ஓ., அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.தரமற்ற மற்றும் பாதி ஹெல்மெட் விற்ற கடைகளுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தரமற்ற, பாதி ஹெல்மெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தரமற்ற ஹெல்மெட் அணிந்திருந்த 38 இருசக்கர வாகன பயணியருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத ஹெல்மெட் விற்பதும், பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி