மேலும் செய்திகள்
ஆர்வத்துடன் கல்வி கற்கும் முதியோர்
11-Oct-2026
– நமது நிருபர் – கலைக்கும், கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பள்ளியில் கால் பதிக்காத கிராமத்து பெண். தன் கை வண்ணத்தால் திறமையை காட்டுகிறார். இந்த திறமை, அவருக்கு ‘ராஜ்யோத்சவா’ விருதை பெற்று கொடுத்துள்ளது. பாகல்கோட் மாவட்டம், இளகல் தாலுகாவின், கோடிஹாள் கிராமத்தை சேர்ந்தவர் ருக்மிணி பாய் நாகப்பா வஷ்தர், 65. பழங்குடியின சமுதாயத்தை இவர், பள்ளி படிப்பும் படித்தது இல்லை. எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால் இவரது கலைத்திறன், அனைவரையும் வியக்க வைக்கிறது. ஊசியும், நுாலும் இருந்தால் போதும். உடைகளில் அற்புதமான எம்ப்ராய்டரி செய்கிறார். உடைகளுக்கு எம்ப்ராய்டரி போடுவது, இவர்களின் குலத்தொழிலாகும். சிறு வயதில் இருந்தே ருக்மிணி பாய்க்கு, இந்த கலையில் ஆர்வம் இருந்தது. பொதுவாக பழைய துணிகளை வீசியெறிவர். ஆனால் ஊசி, நுாலால் துணிகளை ஒன்று சேர்த்து, அழகான வடிவம் கொடுப்பது, இவருக்கு கை வந்த கலை. கைவினை கலையின் வளர்ச்சிக்கு, தன்னுடைய பங்களிப்பை, ருக்மிணி பாய் அளிக்கிறார். இவரது திறமையை அறிந்து, சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து பலரும், ருக்மிணியை தேடி வந்து சேலைகள், உடைகளுக்கு எம்ப்ராய்டரி செய்து கொள்கின்றனர். தன் கற்பனை திறனால், உடைகளை அழகுபடுத்துவதில், ருக்மிணி நிபுணர். படிப்பறிவு இல்லாதவரின் கைகளாலும், அற்புதமான கலையை மலர செய்ய முடியும் என்பதற்கு, இவரே சிறந்த உதாரணமாகும். இவரது சாதனையை அடையாளம் கண்டு, மாநில அரசு, ருக்மிணிக்கு ராஜ்யோத்சவா விருது அறிவித்துள்ளது. பெங்களூரின், ரவீந்திர கலாசேத்ராவில், நேற்று நடந்த கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சியில், ருக்மிணி விருது பெற்றார். ருக்மிணி கூறியதாவது: நான் பள்ளி சென்று படித்தது இல்லை. எனக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. சிறு வயதில் நான் கற்றுக்கொண்ட கைவினை கலை, மறையாமல் பாதுகாக்க வேண்டும் என்பது என் விருப்பம். பழங்குடியினத்தை சேர்ந்த, மிகவும் சாதாரணமான என்னை, மாநில அரசு அடையாளம் கண்டு, ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் மிகவும் பெருமையாக உள்ளது. மாவட்ட மக்களும் கூட, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
11-Oct-2026