நிதித்துறை எச்சரிக்கையை முன்வைத்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி காரசார விவாதம்
பெங்களூரு: நிதி ஆதாரம் இல்லாமல், புதிய திட்டங்களுக்கு மானியம் ஒதுக்க முடியாது என்று, நிதி துறையை எச்சரிக்கை விடுத்ததை முன்வைத்து, சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையில் காரசார விவாதம் நடந்தது. கர்நாடகாவில் நிலவும் வறட்சி குறித்து, ஷிகாரிபுரா பா.ஜ., உறுப்பினர் விஜயேந்திரா, சட்டசபையில் நேற்று பேசுகையில், ''முதல்வர் சிவகுமார் புதிய திட்டங்களை அறிவிக்கிறார். நிதி ஆதாரம் இல்லாமல், புதிய திட்டங்களுக்கு மானியம் ஒதுக்க முடியாது என்று, நிதி துறையை எச்சரிக்கை விடுத்துள்ளதை பார்த்தால், எங்களுக்கு பயமாக உள்ளது. ''நாங்கள் நடத்திய பாதயாத்திரையின் போது, விவசாயிகள் பட்ட கஷ்டத்தை கண்முன்பு பார்த்தோம்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், ''வறட்சி பற்றி மட்டும் இங்கு பேசுங்கள்; நீங்கள் நடத்திய பாதயாத்திரை பற்றி பேச வேண்டாம்,'' என்றார். எதிர்ப்பு இதற்கு, பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அமைச்சர்கள் பாலகிருஷ்ணா, செலுவராயசாமி, நரேந்திரசாமி, பைரதி சுரேஷ், சந்தோஷ் லாட் ஆகியோரும் ஆவேசமாக பேசி பதிலடி கொடுத்தனர். பா.ஜ., உறுப்பினர் சுரேஷ்குமார் குறுக்கிட்டு, ''அரசு ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளில், ஒருவருக்கு கூட ரேஷன் அட்டை கொடுக்கவில்லை. முதியவர்களுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை,'' என ஆவேசமாக பேசினார். கோஷம் முதல்வராக இருந்த சித்தராமையா, அரசை திவாலாக்கி சென்று விட்டார் என்று, நிதி துறை மூலம் சிவகுமார் சொல்கிறாரா என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பியதால், ஆவேசம் அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். சபையில் கடும் கூச்சல் , குழப்பம் நிலவியது. யார் என்ன பேசினர் என்று தெரியவில்லை. திடீரென ஆவேசம் அடைந்த அமைச்சர் செலுவராயசாமி, விஜயேந்திராவை பார்த்து, 'நீ எல்லாம் பா.ஜ., கட்சியின் தலைவரா' என்று கேட்டுவிட்டு, இருக்கையில் அமர்ந்தார். மீண்டும் நிலவிய கூச்சல், குழப்பம், சபாநாயகர் தலையிட்டால் முடிவுக்கு வந்தது. சட்டசபை ஒரு நாள் நீட்டிப்பு வறட்சி பாதிப்பு, மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பான கஸ்துாரி ரங்கன் அறிக்கை பற்றி விவாதிக்க, செப்டம்பர் 21 முதல் 23 வரை 3 நாட்கள் சட்டசபை நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் ஒன்றரை நாட்கள், கஸ்துாரி ரங்கன் அறிக்கை பற்றியும், அடுத்த ஒன்றரை நாட்கள் வறட்சி பற்றியும் விவாதிக்கப்பட்டது. வறட்சி பற்றி விவாதிக்க கூடுதலாக ஒரு நாள் சட்டசபையை நீட்டிக்க, அரசு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், சட்டசபையை இன்று ஒரு நாள் நீட்டித்து, சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல் உத்தரவிட்டார்.