உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சதானந்த கவுடா - விஸ்வநாத் அதிகரிக்கும் வார்த்தை மோதல்

 சதானந்த கவுடா - விஸ்வநாத் அதிகரிக்கும் வார்த்தை மோதல்

பெங்களூரு: பா.ஜ., முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, அக்கட்சி எம்.எல்.ஏ., விஸ்வநாத் இடையில் வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது. பெங்களூரு எலஹங்காவில் கடந்த மாதம் 27ம் தேதி, அரசு சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி நடந்தது. இதில் எலஹங்கா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் கலந்து கொள்ளவில்லை. முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, அக்கட்சி எம்.பி., சுதாகர் கலந்து கொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சதானந்த கவுடாவிடம், விஸ்வநாத் கூறியுள்ளார். இதையும் மீறி அவர் கலந்து கொண்டதால், ஜாதிரீதியாக விஸ்வநாத் விமர்சித்தார். அவரை கண்டித்து சதானந்த கவுடாவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில், சதானந்த கவுடா கூறுகையில், ''எலஹங்காவில் நடந்த கெம்பேகவுடா ஜெயந்தியில் பங்கேற்க செல்ல கூடாது என்று, எம்.எல்.ஏ., விஸ்வநாத் என்னை தடுக்க முயன்றார். இதை மீறி கலந்து கொண்டதால் என்னை ஜாதிரீதியாக விமர்சித்துள்ளார். ''என்னை விமர்சிக்க அவர் யார்... மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராய் ஆதரவுடன் தான், விஸ்வநாத் அரசியலில் வளர்ந்தார். பி.டி.ஏ., தலைவராக இருந்த போது நிலங்களை ஆக்கிரமித்து பணம் சேர்த்தவர்,'' என்றார். இதற்கு பதிலளித்து விஸ்வநாத் கூறுகையில், ''முத்தப்பா ராயுடன் எனக்கு தொடர்பு இருந்ததாக சதானந்த கவுடா பொய்யாக குற்றம் சுமத்தி உள்ளார். அதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது அவதுாறு வழக்கு தொடருவேன். நான், பி.டி.ஏ., தலைவராக இருந்த போது, பி.டி.ஏ., அலுவலகத்தில் லோக் ஆயுக்தா ரெய்டு நடந்தது. எந்த தவறும் கண்டுபிடிக்கவில்லை. நான் நிலத்தை ஆக்கிரமித்ததை நிரூபித்தால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு எதிராக கடலோர பகுதி மக்களை போராட வைத்து, என்னை பெரிய தலைவராக்கியதற்கு சதானந்த கவுடாவுக்கு நன்றி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை