உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் முக கவசம், கிருமி நாசினி விற்பனை அதிகரிப்பு!: மீண்டும் பரவும் கொரோனாவால் மக்கள் உஷார்

பெங்களூரில் முக கவசம், கிருமி நாசினி விற்பனை அதிகரிப்பு!: மீண்டும் பரவும் கொரோனாவால் மக்கள் உஷார்

பெங்களூரு: பெங்களூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் உஷார் அடைந்துள்ளனர். முகக் கவசம், கிருமி நாசினி பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். முகக் கவசங்கள், கிருமி நாசினி விற்பனை அதிகரித்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து மக்கள் நடமாடுகின்றனர்.சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்று, இந்தியாவையும் விடவில்லை. 2020 மற்றும் 2021ல், கர்நாடக மக்களையும் வாட்டி வைத்தது. மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்னரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது உள்ளிட்ட கடுமையான விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.வீட்டில் இருந்து வெளியே வரவே மக்கள் அஞ்சினர். கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டனர். குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த மக்கள், மாதக்கணக்கில் தனிமையில் தவிக்கும் நிர்பந்தம் உருவானது.

மீண்டும் அச்சுறுத்தல்

உலகம் முழுதும் கோடிக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் வேலையை இழந்து, உணவுக்கும் வழியின்றி தவித்ததை மக்கள் இப்போதும் மறக்கவில்லை.கர்நாடகாவில் அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்கள், பள்ளி கல்லுாரிகளில் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் காய்கறி விற்றனர்.மற்றொரு பக்கம், கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநில அரசு, சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மக்கள், கொரோனாவுக்கு பலியாகினர்.மக்களை படாய் படுத்திய கொரோனா, படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது என்றாலும், தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளை, மக்கள் மறக்கவில்லை.தொற்று ஒழிந்தது என, மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், கொரோனா மீண்டும் அச்சுறுத்த துவங்கியுள்ளது.பெங்களூரில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.கர்ப்பிணியர், மூத்த குடிமக்கள், நோயாளிகளை மட்டும் முகக் கவசம் அணியும்படி, சுகாதாரத்துறை ஆலோசனை கூறியுள்ளது. மற்றவர்களுக்கு கட்டாயம் இல்லை.ஆனால் கொரோனாவால் ஏற்கனவே பாடம் கற்றுள்ள மக்கள், உஷாராகியுள்ளனர். பொது இடங்களில் நடமாடும்போது, முகக்கவசம் அணிகின்றனர்.வீடுகளில் கிருமி நாசினி பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். அவ்வப்போது கைகளை கிருமி நாசினி போட்டு சுத்தம் செய்வதை காண முடிகிறது. இதனால் முகக் கவசங்கள், கிருமி நாசினி விற்பனை அதிகரித்துள்ளது.

புத்திசாலித்தனம்

குறிப்பாக ஹலசூர் ஏரி சுற்றுப்பகுதிகளில் 20 முதல், 60 வயது வரையிலான மக்கள், முகக் கவசம், கிருமி நாசினி அதிகம் வாங்குகின்றனர்.மக்களின் இத்தகைய விழிப்புணர்வு நல்லது. நோய் வந்த பின் சிகிச்சை பெறுவதை விட, நோய் பரவாமல் தடுப்பது புத்திசாலித்தனம் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு

இங்குள்ள மருந்து கடை உரிமையாளர்கூறியதாவது:ஹலசூர் ஏரி சுற்றுப்பகுதிகளில், பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. கொரோனா பரவுவதால், முன்னெச்சரிக்கையாக முகக் கவசம் அணிகின்றனர். கிருமி நாசினி பயன்படுத்துகின்றனர். எங்கள் கடையில் விற்பனை அதிகரித்துள்ளது.இதற்கு முன்பு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, கிருமி நாசினி, முகக்கவசம் அதிகம் ஸ்டாக் வைத்திருந்தோம். விற்பனையும் அதிகமாக இருந்தது. அதன்பின் தொற்று குறைந்ததால், விற்பனை அவ்வளவாக இருக்கவில்லை.ஆனால் சமீப நாட்களாக, கொரோனா பரவுவதால் மக்கள் விழிப்படைந்துள்ளனர். மூத்த குடிமக்கள், மாணவ, மாணவியர், பெண்கள் என, அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.பொது இடங்களில் முகக் கவசம் அணிகின்றனர். கிருமி நாசினி பயன்படுத்துகின்றனர். எனவே மீண்டும் விற்பனை அதிகரித்துள்ளது.பெரும்பாலான மக்கள் 'என்95' முகக் கவசங்களை வாங்குகின்றனர். இவை மிகவும் பாதுகாப்பானவை என, மக்கள் கருதுகின்றனர். இவற்றின் விலை 45 முதல் 95 ரூபாய் வரை உள்ளது. அதே போன்று பத்து ரூபாய்க்கு கிடைக்கும் சர்ஜிகல் முக கவசமும் அதிகம் விற்பனையாகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை