7 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்ற தாயின் 2வது கணவர் கைது
கும்பலகோடு: மனைவியுடன் நெருக்கமாக இருக்க தடையாக இருந்த 7 வயது சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்ற, தாயின் 2வது கணவர் கைது செய்யப்பட்டார். துமகூரை சேர்ந்தவர் தர்ஷன், 30. பெங்களூரு ஆனேக்கல்லில் உள்ள மொத்த விற்பனை கடையில் வேலை செய்தார். இவருக்கும், கணவரை பிரிந்து, 7 வயது மகள் சிரியுடன் வசித்த ஷில்பா, 30, என்பவருக்கும், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின், பெங்களூரு கும்பலகோடு கன்னிகா லே - அவுட்டில் வசித்தனர். முதலில் ஷில்பாவின் 7 வயது மகள் மீது தர்ஷன் பாசமாக இருந்தார். நாட்கள் செல்ல, செல்ல சிரி மீது தர்ஷனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. எதற்கு எடுத்தாலும் அடித்துள்ளார். கடந்த 24ம் தேதி காலை ஷில்பா வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சிரி, பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று அங்கேயே அமர்ந்திருந்தார். அங்கு வந்த தர்ஷன், வீட்டிற்கு வரும்படி சிரியை அழைத்தார். 'வீட்டிற்கு வந்தால் நீங்கள் என்னை அடிப்பீர்கள், நான் வர மாட்டேன்' என, சிரி மறுத்துள்ளார். அங்கிருந்தவர் தர்ஷனுக்கு அறிவுரை கூறினர். கோபம் அடைந்த தர்ஷன், சிரியை வீட்டிற்கு அழைத்துச் சென்று தாக்கியதுடன், கழுத்தை நெரித்துள்ளார். மூச்சுத்திணறி சிரி இறந்தார். அங்கிருந்து பைக்கில் தர்ஷன் தப்பினார். ஷில்பா அளித்த புகாரை அடுத்து, கும்பலகோடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, துமகூரில் பதுங்கியிருந்த தர்ஷனை கைது செய்தனர். தன் பேச்சை கேட்காததாலும், மனைவியுடன் நெருக்கமாக இருப்பதற்கு தடையாக இருந்ததாலும், கோபத்தில் சிரியை கொன்றதை தர்ஷன் ஒப்புக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.