தாயை பிரிந்த குட்டி யானை மைசூருக்கு அனுப்பி வைப்பு
சாம்ராஜ் நகர்: தாயை பிரிந்து சுற்றித்திரிந்த ஒன்றரை மாத குட்டி யானை, மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாம்ராஜ்நகர் மாவட்டம் அஜ்ஜிபூர் அருகில் காவ்வே ஆஞ்சநேய சுவாமி கோவில் அருகில் உள்ள பிரதான சாலையில், குட்டி யானை ஒன்று, தன் தாய் யானையை தேடி கடந்த 20ம் தேதி சுற்றி வந்தது. இதை கவனித்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள், குட்டியை, தாயுடன் இணைக்க முயன்றனர். ஆனால், தாய் யானையோ அல்லது யானை கூட்டமோ காணப்படவில்லை. அத்துடன் குட்டி யானை பிறந்து ஒன்றரை மாதங்கள் மட்டுமே ஆயிருப்பதால், அதை மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதுகுறித்து மலை மஹாதேஸ்வரா வன விலங்கு சரணாலய துணை வன பாதுகாவலர் விராஜ் ஹொசூர் கூறுகையில், ''குட்டி, சற்று சோர்வுடன் காணப்படுகிறது. இதை தகுந்த முறையில் பராமரிக்கும் வசதி எங்களிடம் இல்லை. எனவே, மைசூரு மிருககாட்சிக்கு சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு குட்டி யானைக்கு தேவையான பராமரிப்பு வழங்கப்படும்,'' என்றார். அதன்படி, மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு நேற்று கொண்டு சென்றனர். அங்கு வந்த யானைக்கு, எடை பரிசோதனை நடத்தினர்.