மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், முன்னாள் செயலருக்கு சிக்கல்
பெங்களூரு: விதான் சவுதா முன், ஆர்.சி.பி., அணிக்கு பாராட்டு விழா நடத்திய விவகாரத்தில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், முதல்வரின் முன்னாள் அரசியல் செயலருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.ஐ.பி.எல்., போட்டியில் கோப்பை வென்ற, ஆர்.சி.பி., அணிக்கு பெங்களூரு விதான் சவுதா படிக்கட்டில் வைத்து, கடந்த 4ம் தேதி பாராட்டு விழா நடந்தது. அந்த நேரத்தில் சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இந்த உயிரிழப்பு பற்றி மாஜிஸ்திரேட், சி.ஐ.டி., நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்தா உட்பட 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.முறையான அனுமதி இல்லாமல் அரசின் தலைமை செயலர் ஷாலினியும், நிர்வாக சீர்திருத்த துறை செயலர் சத்யவதியும் அவசர அவசரமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததும், இதன் பின்னணியில் முதல்வரின் முன்னாள் அரசியல் செயலர் கோவிந்தராஜ் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதன் காரணமாகவே கோவிந்தராஜை, தன் அரசியல் செயலர் பதவியில் இருந்து முதல்வர் நீக்கியதாக கூறப்படுகிறது.மேலும், ஒரே நேரத்தில் விதான் சவுதா, சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சி நடத்தினால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று, போலீஸ் அதிகாரிகள், ஷாலினி, சத்யவதியிடம் முறைப்படி கடிதம் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்தனர்.ஆனால் முதல்வரிடம் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு, போலீசார் சம்மதித்து விட்டனர் என்று தலைமைச் செயலர் ஷாலினி கூறியதாகவும் அதைத் தொடர்ந்தே நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு பேட்டியின் போது, முதல்வர் சித்தராமையாவே கூறினார்.அத்துடன் நகர போலீசாரை மைதான நிர்வாகத்துக்கு விழா நடத்த அனுமதி இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க விடாமலும் இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் முதல்வரின் அப்போதையை அரசியல் செயலர் தலையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.விதான்சவுதா படிக்கட்டுகளில் விழா நடக்கும் வேளையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஷாலினி, மக்களை மைதானம் நோக்கி படையெடுத்துச் செல்லும் வகையில் பேட்டி கொடுத்ததும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.போலீஸ் அதிகாரிகளை முறைப்படி பணி செய்ய விடாமல் தடுத்ததாக, ஷாலினி, சத்யவதி, கோவிந்தராஜ் ஆகியோர் மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பை பதிவு செய்யாததால் போலீசாருக்கும் அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டதாலேயே முதல்வர் நடவடிக்கை எடுத்தார் என்று கூறப்படுகிறது.