சக்தி திட்டம் கொண்டாட்டம்: நடத்துநராக மாறிய முதல்வர்
பெங்களூரு: 'சக்தி' திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள், 500 கோடி முறை இலவசமாக பயணம் செய்துள்ளதை கொண்டாடும் வகையில், நேற்று 30 பெண் பயணியருக்கு, முதல்வர் சித்தராமையா இளகல் சேலை, இனிப்பு வழங்கினார்.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்த பின், அமல்படுத்தப்பட்ட வாக்குறுதி திட்டங்களில், 'சக்தி' திட்டமும் ஒன்று. மற்ற திட்டங்களில், குளறுபடிகள் இருந்தாலும், இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இதனால் பெண்களிடமும் ஆதரவு கிடைத்துள்ளது.தினமும் லட்சக்கணக்கான பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்கின்றனர். இத்திட்டத்தின் கீழ், பயணம் செய்த பெண்களின் எண்ணிக்கை, 500 கோடியை எட்டியதையடுத்து, நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.நேற்று காலை பஸ்சில் பயணம் செய்த 30 பெண் பயணியருக்கு, பி.எம்.டி.சி., நடத்துநராக மாறிய முதல்வர் சித்தரராமையா, 'பிங்க்' நிற 'பூஜ்யம்' டிக்கெட் கொடுத்ததுடன், இளகல் சேலை, இனிப்பு போளி வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்தோம். 2023 மே 20 அன்று காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன், உடனடியாக இவற்றை செயல்படுத்த அமைச்சரவை கூட்டப்பட்டது.இக்கூட்டத்தில், அமைச்சரவை எடுத்த முடிவின்படி, ஜூன் 11 அன்று 'சக்தி' திட்டம் துவக்கப்பட்டது. அன்று முதல் மாநிலத்தில் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண வசதி வழங்கப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில், 5,800 புதிய பஸ்கள் வாங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதில், நான்கு பேக்குவரத்துக் கழகங்களிலும், 5,049 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.போக்குவரத்துத் துறையில் 9,000 பணியிடங்களில், 6,700 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 ஆயிரம் பேரை புதிதாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு ஆண்டுகளில், கர்நாடகாவின் நான்கு போக்குவரத்துக் கழகங்களும், 185 தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இதுபோன்று, மைசூரில் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தும் கமிட்டி துணைத் தலைவி புஷ்பா அமர்நாத், பெண்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.