பா.ஜ.,வில் இணைய சிவகுமார் திட்டம்
விஜயபுரா: ''துணை முதல்வர் சிவகுமார், ஒரு காலை பா.ஜ.,வில் வைத்துள்ளார். இது குறித்து, டில்லியில் மேலிட அளவில் பேச்சு நடந்துள்ளது,'' என, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார். விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி: துணை முதல்வர் சிவகுமார், ஏற்கனவே ஒரு காலை பா.ஜ.,வில் வைத்துள்ளார். டில்லியில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுடன், மேலிட தலைவர்களை சந்தித்து முதற்கட்ட பேச்சு நடத்தியுள்ளார். காங்கிரசின் 60 முதல் 70 எம்.எல்.ஏ.,க்களை அழைத்து வந்து, பா.ஜ.,வில் இணைய திட்ட மிட்டுள்ளார். இதே காரணத்தால், சட்டசபையில், 'நமஸ்தே சதா வத்சலே' என்ற ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடினார். பா.ஜ.,வுடன் சிவகுமார் சமரசம் செய்து கொண்டுள்ளார். இவருடன் 12 எம்.எல்.ஏ.,க்கள் கூட இல்லை. பலரும் முதல்வர் சித்தராமையாவுடன் உள்ளதாக அறிக்கை வந்துள்ளது. எனவே அரசு அமைக்க, பா.ஜ., முயற்சிக்கவில்லை என, பா.ஜ., ஏற்கனவே கூறியிருந்தது. இவ்வாறு அவர் கூறினார். இஷ்டம் இல்லை! நான் பா.ஜ.,வில் இணைய ஆலோசிப்பதாக, எத்னால் கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. கழிவுநீர் மற்றும் சாணத்தின் மீது கல்லெறிவதில், எனக்கு இஷ்டம் இல்லை. - சிவகுமார், துணை முதல்வர்.