உங்கள் வீட்டை ஒழுங்குபடுத்துங்கள் பா.ஜ.,வுக்கு சிவகுமார் பதிலடி
பெங்களூரு : ''உங்கள் வீட்டை முதலில் ஒழுங்குப்படுத்துங்கள்; பிறகு எங்கள் கட்சியில் என்ன நடக்கிறது என பாருங்கள்'' என்று, பா.ஜ., தலைவர்களுக்கு, துணை முதல்வர் சிவகுமார் பதிலடி கொடுத்து உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதல்வர் சித்தராமையா, என்னை புறக்கணிப்பதாக பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். முதலில் அவர்கள் தங்கள் வீட்டை ஒழுங்குபடுத்த வேண்டும். பின், காங்கிரசில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். பா.ஜ., கட்சிக்குள் நிறைய பிரச்னை உள்ளது. பெங்களூரு நகர அமைச்சர் என்ற முறையில், நகரில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். 'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் உருவாக்குவதற்கு முன், அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துகளை கேட்டோம். மாநகராட்சி தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் சமர்பிக்கப்பட வேண்டும். பெங்களூரு மக்களின் நலனுக்காக மாநகராட்சியை 5 ஆக பிரிக்க முடிவு செய்து உள்ளோம். அரசியல் காரணத்திற்காக பா.ஜ., தலைவர்கள் விமர்சிக்கின்றனர். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. முதல்வர் பதவி கிடைக்காதது குறித்து, மல்லிகார்ஜுன கார்கே தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதில் எந்த தவறும் இல்லை. அவர் கட்சிக்காக நிறைய உழைத்து உள்ளார். தனது உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த காலத்தில் உரம் கேட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, பா.ஜ., அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. மழை பொழிவு அதிகமாக இருப்பதால், விவசாய நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளன. இதனால் உரத்திற்கு தேவையும் அதிகரித்து உள்ளது. மத்திய அரசு கூடுதல் உரம் வழங்க வேண்டும். உரம் விஷயத்தில் மாநில அரசை கண்டித்து பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்துவது ஏன் என்று தெரியவில்லை. மாநில அரசிடம் உர துறை இருக்கிறதா. மத்திய அரசு வழங்கினால், விவசாயிகளுக்கு கொடுப்பது எங்கள் பொறுப்பு. எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு உரம் தேவைப்படுகிறது என்று எங்களிடம் கணக்கு உள்ளது. அதன்படி வழங்குவோம். விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.