எத்னாலுக்கு கொலை மிரட்டல் பரவும் ஆடியோவால் அதிர்ச்சி
விஜயபுரா: விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலை கொலை செய்ய சதி நடக்கிறது. 'இவரது உடல் இரண்டு பாகம் ஆவது உறுதி' என, இளைஞர் ஒருவர் பேசிய ஆடியோ பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விஜயபுராவில் ஏப்ரல் 7ம் தேதியன்று நடந்த ராமநவமி நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பங்கேற்றார்.அப்போது அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், முஸ்லிம் சமுதாயத்தினர் கொதிப்படைந்தனர்.இது குறித்து, எத்னால் மீது புகார் பதிவாகியுள்ளது. அவரை கண்டித்து, வரும் 15ம் தேதியன்று, விஜயபுரா பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எத்னாலை கொலை செய்யும்படி இளைஞர் ஒருவர், தன் சமுதாயத்தினரிடம் கூறியுள்ளார். இவர் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த இளைஞர், 'ஏப்ரல் 15ம் தேதி நடக்கும் விஜயபுரா பந்தில், நமது சமுதாயத்தின் அனைத்து சகோதர, சகோதரியர் பங்கேற்க வேண்டும்.'உங்களின் அக்கம், பக்கத்து ஊரார்களையும் அழைத்து வர வேண்டும். 1 லட்சம் பேர் குவிய வேண்டும். அனைத்து முஸ்லிம்களும் தயாராக உள்ளனர்.'ஏப்ரல் 15ம் தேதியன்று, என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி வையுங்கள்.'அம்பேத்கர் சதுக்கத்தில் சேருங்கள். அன்றைய தினம் அவர் (எத்னால்) கைது செய்யப்பட வேண்டும் அல்லது அவரது உடலில் இருந்து தலை தனியாக வேண்டும்' என கூறியுள்ளார்.இந்த ஆடியோ பரவியதும் உஷாரான போலீசார், ஆடியோவில் பேசிய இளைஞரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.