மாநகராட்சி பள்ளிகளில் ஷூக்கள், சாக்ஸ் தாமதம்
பெங்களூரு,: பள்ளிகள் துவங்கி ஒரு மாதமாகியும், பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சீருடை, ஷூக்கள், சாக்ஸ் கிடைக்கவில்லை. தற்போதைக்கு கிடைப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.பெங்களூரில் மாநகராட்சி சார்பில் 93 குழந்தைகள் காப்பகம், 17 தொடக்க பள்ளிகள், 35 உயர் நிலைப்பள்ளிகள், 20 பி.யு.சி., கல்லுாரிகள், ஆறு முதுகலை பட்டப்படிப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் 22,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் இலவச சீருடை, பாட புத்தகங்கள், ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படுகிறது. அந்தந்த கல்வியாண்டு துவங்கும் முன்பே, சீருடை, ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளிக்கின்றனர். ஆனால் எந்த ஆண்டும் சொன்னபடி நடந்து கொண்டது இல்லை. நடப்பாண்டு பள்ளிகள் திறந்து, 35 நாட்களுக்கு மேலாகின்றன. இதுவரை மாணவ, மாணவியருக்கு சீருடை, ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படவில்லை. சிலர் சாதாரண உடையில், செருப்பு அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். சிலர் கடந்தாண்டு வழங்கப்பட்ட பழைய சீருடை, ஷூக்கள் அணிந்து வருகின்றனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு ஷூக்கள், சாக்ஸ் வழங்க டெண்டர் அழைக்கப்பட்டது. இதில் யாரும் பங்கேற்கவில்லை. எனவே மறு டெண்டர் அழைத்துள்ளோம். டெண்டர் முடிவானதும், மாணவ, மாணவியரின் கால் அளவை தெரிந்து கொண்டு, ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படும்.பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் ஜூலை 31 வரை, மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி உள்ளது. மேலும் அதிகமான மாணவர்கள் சேருவர் என, எதிர்பார்க்கிறோம். மாணவர் சேர்க்கை முடிந்தவுடன், ஒரே முறையில் அனைவருக்கும் ஷூக்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.